ஞாயிறு, 29 நவம்பர், 2020

சிறையில் ஒரு ”ஸ்ட்ராவுக்காக” காத்திருக்கும் 83 வயது சமூக செயற்பாட்டாளர்!

 


Stan Swamy, 83, waits as the buck is passed on his sipper and straw :  உபா சட்டத்தின் கீழ் தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், பாதிரியாருமான 83 வயது ஸ்டான் ஸ்வாமியின் ஒரு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கோப்பைக்கான வேண்டு கோள் எவ்வாறு சட்ட நடைமுறைகள் உணர்ச்சியற்றதாக இருக்கிறது என்பதை எடுத்துக் கூறும் வழக்காக உள்ளது. எல்கர் பரிஷாத் வழக்கில் அக்டோபர் 7ம் தேதி கைது செய்யப்பட்ட அவரின் வேண்டுகோள் தொடர்பாக வியாழக்கிழமை நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.

மும்பையில் தலோஜா மத்திய சிறையில் இருக்கும், பர்கின்சன் நோயால் அவதியுற்றிருக்கும் ஸ்வாமிக்கு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கப் உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அந்த சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் சிறைக்கு அழைத்து செல்லபட்ட சில நாட்களிலேயே உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்வாமியின் வழக்கறிஞர் குழு, ஸ்வாமி காத்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு பொருட்களும் வெகு ஆண்டுகளாக அவரின் அத்தியாவசிய தேவையான பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்று கூறினார். அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவருக்கு தேவையான பொருட்களை அவர் கையோடு ஒரு பையில்வ் வைத்து எடுத்து வந்துள்ளார். பகைச்சாவில் தன்னுடன் பணியாற்றும் நபர் கொடுத்த சிப்பர் க்ளாஸூம் அதில் அடங்கும். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 8ம் தேதி அவர் ஆஜர்செய்யப்பட்டு அதே நாளில் தலோஜா சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

அவருடைய வழக்கறிஞர்கள் குழுவின் படி, நவம்பர் 6ம் தேதி அன்று ஸ்வாமிக்கு சிப்பர் கப்பை சிறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதை அறிந்துள்ளனர். அதே நாளில் என்.ஐ.ஏ. அந்த சிப்பரை அவரிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்புக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்கள்.

சிறை அதிகாரிகள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், அவருடைய பொருட்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனை திருப்பி தர நேரம் அதிகம் எடுக்காது என்று எண்ணி நாங்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தோம் என்றார் அவருடைய வழக்கறிஞர் ஷரிஃப் ஷேய்க். இருப்பினும் நீதிமன்றம் இது தொடர்பாக தீபாவளி விடுமுறை முடிந்து நவம்பர் 26ம் தேதி அன்று பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. வியாழக்கிழமை என்.ஐ.ஏ. அளித்த அறிக்கையில், ஸ்வாமி கொண்டு வந்திருந்த பொருட்கள் தொடர்பாக நாங்கள் சுதந்திரமாக ஆய்வு செய்தோம். ஆனால் அதில் சிப்பர் மற்றும் ஸ்ட்ரா கண்டு பிடிக்க இயலவில்லை என்று கூறினார்.

இந்த வாதத்தை கருத்தில் கொண்டு, இல்லாத பொருள் குறித்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதன் பின்னர், ஸ்டான் ஸ்வாமிக்கு தேவையான குளிர்கால உடைகள், ஸ்ட்ரா மற்றும் சிப்பரை வழங்க சிறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு மனுவை ஸ்வாமி தரப்பில் வைத்தனர். சிறை நிர்வாகம் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி டிசம்பர் 4ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது நீதிமன்றம்.

மகாராஷ்ட்ர மாநில உள்துறை துணை அமைச்சர் சடேஜ் டி பாட்டில் “அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், ஸ்ட்ரா, சிப்பர் கப் உட்பட” வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அவருக்கு தேவையான அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் இதர வசதிகளையும் சிறை விதிகளுக்கு உட்பட்ட வகையில் வழங்கியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் கேள்விக்கு பதில் அளித்த தலோஜா சிறை அதிகாரிகள் ஸ்வாமிக்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், உயர் புரத உணவுகள், குளிக்க வெந்நீர், பெட்ஷீட், மெத்தை மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் பர்கின்சன்ஸ் இருப்பதால் அவருடன் உதவிக்கு இரண்டு நபர்களை நியமித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

அதில் மேலும் ஸ்வாமிக்கு வீல் சேர், வாக்கிங் ஸ்டிக், வால்க்கர், நாற்காலி, சிப்பர் கோப்பை, சிப்பர் பாட்டில், ஸ்ட்ராக்கள், அவருடைய காது மிஷினுக்கான பேட்டரி செல்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சைக்ராட்ரிஸ்ட் குறிப்பிட்ட இடைவெளியில் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்வதாகவும் கூறினார்கள்.

ஆனாலும் சமூக செயற்பாட்டாளரும், ஸ்வாமியின் பாதுகாப்பு குழுவில் ஒருவருமான பாதிரியார் செட்ரிக் பிரகாஷ் “இந்த வாரம் ஸ்வாமியிடம் பேசிய போதும் கூட அவருக்கு சிப்பர் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாரம் ஸ்வாமி அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தின் ஒரு பகுதி, அவர் ஒரு முழு கை ஸ்வெட்டர், ஒரு மெல்லிய போர்வை மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் ஆகியவற்றைக் கேட்டதாகக் கூறினார். “சிறை வாசலில் இந்த பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும், அவற்றைக் கொண்டுவந்தவர் அவற்றை ஒரு முறை அல்ல, மூன்று முறை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது என்பதையும் கேட்டு நான் வருந்துகிறேன்” என்று பிரகாஷ் பகிர்ந்து கொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் மறுபடியும் வரும் பட்சத்தில் அதனை சிறை அதிகாரிகள் உங்களிடம் சமர்பிப்பார்கள் என்று சிறை வட்டாரம் ஸ்வாமியிடம் உறுதி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. மாவோய்ஸ்ட் நடவடிக்கைகளில் ஸ்வாமிக்கு ஈடுபாடு இருந்ததாக என்.ஐ.ஏ குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு தன்னுடைய எழுத்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்காக செய்யும் பணிகள் மற்றும் சாதி மற்றும் நில போராட்டங்கள் தொடர்பாக அவர் ஆற்றும் பணிக்காகவே இலக்காக்கப்படுள்ளேன் என்று கூறியுள்ளார். ஸ்வாமியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம். வியாழக்கிழமை பதியப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது