செவ்வாய், 10 நவம்பர், 2020

சட்ட விரோதிகளால் செய்தியாளர் மோசஸ் படுகொலை : அரசியல் தலைவர்கள் கண்டனம்

 நில அபகரிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை வெளிச்சத்துக்கு கொண்ட வந்த காரணத்தினால் தமிழக தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் பரிபதாக கொல்லப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர  மோசஸ். சமூக அவலங்களை அம்பலப்படுத்திய காரணத்தினால் நேற்று இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிறப்பு பார்வை’ எனும் நிகழ்ச்சியில் மோசஸ் சமூகத்தில் மறைமுகமாக நடைபெற்றுவரும் சட்ட விரோத செயல்களை சுட்டிக் காட்டி வந்தார்.

தனது உயிருக்கும், உடமைக்கும் சமூக விரோதிகளால்  ஆபத்து நிகழாம் என மோசஸ் ஏற்கனவே தமிழக காவல்துறையினரிடம் கூறியிருந்த நிலையில், மோசஸ் கொல்லப்பட்டிருக்கிறார்.

செய்தியாளர் புகார் அளித்தும் காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசியல் தலைவர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பத்திரிக்கையளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமலும் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடி என்று மு. க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். சமூக விரோதக் கும்பல்களை அரசு காப்பாற்றுகிறதா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது  செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ” குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், கொலையுண்ட மோசஸ் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் . உரிய விசாரணை மேற்கொண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் இதற்கு உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”என்று வலியுறுத்தப்பட்டது.

உயிரிழந்த மோசஸின் தந்தை ஜேசுதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இப்பகுதியில் நடந்து  வரும் பிரச்சினைகள் குறித்து என் மகன் தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். முன்னதாக, நில அபகரிப்பு குறித்த சில விசயங்களை ஊடகங்களில் அமபலப்படுத்தினார். அப்போதிருந்து நாங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள ஆரம்பித்தோம். அதே கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதையும் கடந்த வாரம் மோசஸ் சுட்டிக் காட்டினார். பல அச்சுறுத்தல்கள் வந்தன. எனவே அவர் காவல் நிலையத்திற்குச் சென்று அச்சுறுத்தல்கள் குறித்து பேசினார்.  ஆனால் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும்  கொடுக்கவில்லை,”என்று தெரிவித்தார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இந்த படுகொலை சம்பவத்தை வன்மையாக கண்டித்தது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”

*செய்தி வெளியிட்டதற்காகப் படுகொலை என்றால், தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலையின் அவலத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  சமுக விரோதக் கும்பல்கள், மணல் , நீர்நிலை ஆக்கிரமிப்பு, கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பவர்கள் , சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன.

இதன் விளைவாகவே இன்று ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற சமுக விரோதக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அரசியல் கையூட்டுக்குக் கட்டுப்பட்டுள்ளதா? இதில் எதுவாக இருந்தாலும் உள்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுக் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. சமுக விரோதக் கும்பலின் கொலைவெறிக்குப் பலியான நிருபர் மோசஸ் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.