சனி, 14 நவம்பர், 2020

பீகார் முடிவுகள்: என்.டி.ஏ- பாஜக.வுக்கு சாதகமற்ற 5 முக்கிய அம்சங்கள்

 அரசியல் மற்றும் தேர்தல் ரீதியாக, பீகார் மாநிலம் முக்கியமானது. இந்தி பேசும் மாநிலங்களின் அரசியல் களத்தில் பீகார் அரசியல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மொத்தமுள்ள 243 உறுப்பினர் அடங்கிய சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 தொகுதிகள் கிடைத்தது. இதில், பிஜேபிக்கு மட்டும் 74 தொகுதிகளும் ஐக்கிய ஜனதா தள் கட்சிக்கு 43 தொகுதிகளும் கிடைத்தன. 2015 வருட சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 157 இடங்களில் 53 இடங்களில்  தான் பாஜக வெற்றியடைந்தது. எனவே இத்தேர்தலில், பாஜக அதிக அளவில் ஆதாயம் அடைந்தது என்று தான் கூற வேண்டும் . நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள் சோபிக்க தவறியதால், இது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்ற அளவில் தான் இந்த வெற்றியை பாஜக கருதும் .

அரசியல் களத்தில் ஐக்கிய ஜனதா தள் கட்சியின்  பின்னடைவு காரணமாக, பீகார் என்.டி.ஏ கூட்டணியின் ஏகபோக குரலாக  பாஜக ஒலிக்கும். இதைத்தான், பாஜக  நீண்டகாலமாக முயற்சித்து வந்தது.

முதலமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அத்தகைய  கோரிக்கையை  ஆதரிக்க வாய்ப்பில்லை என்று பல தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், சில காலங்களுக்குப் பிறகு கட்சி அத்தகையை  கோரிக்கையை பரிசீலிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலில் மகத்தான வெற்றியை உறுதி செய்ததன் விளைவாக, ஆட்சி அமைப்பது, கொள்கைகளை வரையறுப்பது, திட்டங்களை வகுப்பது , நியமனங்களை முடிவு செய்வது  போன்றவற்றில் பாஜக தனது இருத்தலை அதிகரிக்கும். தனது ஆதரவாளர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கான  சாத்தியக் கூறுகளை இது உருவாக்கும்.

பீகார் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மற்ற மாநிலத் தேர்தல்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நிச்சயமாக. ” தற்போதைய அரசியல் சூழல் மிக முக்கியமானது” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். மாநிலத்தில் வலுவான பிராந்திய கட்சிகள் இருந்தபோதிலும், பாஜக தனது வெற்றியை உறுதி செய்யும் திறனைப் பெற்றுள்ளது. மேற்கு வங்காள அரசியலிலும் இதன் தாக்கம் கட்டாயம் உணரப்படும்.  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் சூழலை பாஜக கடுமையான முன்னெடுத்து வருகிறது. இருப்பினும், மேற்கு வங்கத்தில், ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பாஜக மற்றும் இடதுசாரி -காங்கிரஸ்  கட்சிகளுக்கு இடையில் பிரிக்கப்படலாம்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிடைத்த  வெற்றிக்குப் பின், மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் செயல்திறன் வியக்கத்தக்கதாக இல்லை. குறிப்பாக, ஜார்க்கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கட்சி கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. மகாராஷ்டிராவில் அதிகாரத்தை இழந்தது.  ஹரியானாவில் அதன் கை கட்டப்பட்டது. ஆனால், பீகார் தேர்தலில் இந்த போக்கை பாஜக தடுத்து நிறுத்தியது என்றே சொல்லலாம். அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களின் தேர்தல்களில் புது உத்வேகம் அளிக்கும் என்று பாஜக நம்புகிறது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மற்ற இரண்டு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பது உண்மை தான். எவ்வாறாயினும், பீகார் மாநிலத்  தேர்தல் வெற்றி சில தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டணிக் கட்சிகளுடன் அதிக இடங்களை கேட்டுப் பெறவும், தனது அரசியல் இருத்தலையும் அதிகரிக்கவும் பாஜக முனையும்.

பிரதமர் மோடியின் புகழ் 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை, பொருளாதார மந்தநிலை போன்றவைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி குறித்த மக்களின் பார்வையில் மாற்றமில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.  நிதிஷ்குமாரை விட, பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக கருதுகிறது. இது, பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதுடன், கொள்கை ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள தைரியம் அளிக்கும்.

 

பாஜக கட்சிக்கு பிற சிக்கல்கள்?

கட்சியில் வலுவான பிராந்திய தலைவர்கள் இல்லாதிருப்பதை இத்தேர்தல் மீண்டும்  அம்பலப்படுத்தியது. அடல் பிஹாரி வாஜ்பாய்  தனது  ஆட்சிக் காலத்தில், பி.எஸ் எடியூரப்பா, தேவேந்திர ஃபட்னாவிஸ் , வசுந்தரா ராஜே , ராமன் சிங் போன்ற தலைவர்களை முதன்மைப்படுத்தினார். பாஜகவின் தற்போதைய தலைமையின் கீழ், பழைய தலைமுறையைச் சேர்ந்த எடியூரப்பாவால் மட்டுமே தனது அரசியல் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

தலைமையை அதிகளவு மையப்படுத்தும் போக்கு அதிகளவு பயன்தராது  என்று பெயர் குறிப்பிட விரும்பாத  இரண்டு பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மைய அதிகாரக் கட்டமைப்பு பிராந்திய தலைவர்களை பலவீனப்படுத்தி வருகிறது. பல சந்தர்ப்பங்களில், பிராந்தியத் தலைவர்கள் தங்கள் அரசியல் களங்களை  தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி?

அண்மையில் ஏற்பட்ட சில பின்னடைவுகளுக்குப் பிறகு,  பீகார் முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணியின் இருத்தலை அதிகரித்துள்ளன.

முக்கிய கூட்டணி கட்சியாக விளங்கிய சிவசேனா, சிரோமணி அகாலி தளம் ஆகிய இரண்டும் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன. ஐக்கிய ஜனதா தளம் தற்போது மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ஏகபோகமாக விளங்கும். எவ்வாறாயினும், நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக அறிவிப்பதன் மூலம் “கூட்டணியின் முக்கியத்துவத்தை” பாஜக எடுத்துதுரைக்க முயல்கிறது. நம்பத்தகுந்த கூட்டாளர் என்ற பிம்பத்தை உருவாக்க இது அனுமதிக்கிறது.    \


 

மேலும், நிதிஷ் குமார் பின்னடவை சந்தித்த காரணத்தினால், சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம் பெற வாய்ப்புகள் உருவாகும். சில தொகுதிகளில், லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளர்கள் பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றதாக முடிவுகள் குறிப்பிடுகின்றன.  மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் லோக் பஸ்வானை  வெளியேற்ற நிதிஷ் குமார் அழுத்தம் கொடுக்க முடியாத சூழலும் தற்போது உருவாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பலவீனம் பாஜகவுக்கு  நல்ல செய்தி என்று கட்டாயம் எடுத்துக் கொள்ள முடியாது. 1950-60 களில் தேசிய அளவில், காங்கிரஸ் கட்சி கொண்ட ஏகபோக செல்வாக்கு இன்றைய பாஜக வுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும் . காங்கிரஸ் கட்சியின் பன்மை மற்றும் பலதரப்பு தன்மையும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதற்கு கிடைத்த அங்கீகாரமும் அதனை      பல தசாப்தங்களாக ஆட்சியில் அமர வைத்தன. இந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்ற பிம்பத்தை பாஜக  கொண்டிருப்பதால், தென் மாநிலங்களுக்குள் அதனால்  ஆழமாக காலூன்ற முடியவில்லை.