புதன், 25 நவம்பர், 2020

நிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்? எவை பாதிக்காது?

 நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் புதன்கிமை (நவம்பர் 25) அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளார். இருப்பினும், தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக முதல்வர் பழனிசாமி பொது விடுமுறை அறிவித்துள்ளதால் நவம்பர் 25, புதன்கிழமை என்னென்ன சேவைகள் பாதிக்கும் என்னென்ன சேவைகள் பாதிக்காமல் தொடர்ந்து வழங்கப்படும் என்ற தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது.

அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலே அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

அத்தியாவசிய பணிகளான, பால், குடிநீர், மின்சார ஆகிய பணியாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நிவர் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், புதுவை, விழுப்புரம் 7 மாவட்டங்களில் மட்டும் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், 7 மாவட்டங்களைத் தவிர வழக்கம் போல பெட்ரோல் பக்குகள் செயல்படும்.

மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் சுகாதாரத்துரை அறிவுறுத்தியுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நவம்பர் 25 புதன்கிழமை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரயில் சேவை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இரு மார்கங்களிலும் நாளை 1 நாள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், சென்னையில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், செங்கல்பட்டு, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 25ம் தேதி நடைபெறுவதாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, நிவர் புயல் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் 25 முதல் வரும் நவம்பர் 27ம் தேதி வரை நடைபெறவிருந்த ஐடிஐ தேர்வு டிச.3 – 5ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இன்னும் 750க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் படிப்படியாக கரைக்கு திரும்பிக்கொண்டுருப்பதாகக் கூறப்படுகிறது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தகவல் தொடர்பு பாதிக்கப்படாமல் இருக்க, .எஸ்.என்.எல் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. புயலால் மின் தடை ஏற்பட்டாலும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.