வியாழன், 26 நவம்பர், 2020

நிவர் புயல் : 2 ஆண்டுகளில் மற்றொரு புயலை தமிழகம் எப்படி எதிர் கொள்கிறது?

 வட இந்திய பெருங்கடலில் ஒரே வாரத்தில் ஏற்படும் இரண்டாவது புயல் இந்த நிவர். மே மாதத்தில் ஏற்பட்ட அம்பன் புயலுக்கு பிறகு வங்கக் கடலில் இந்த ஆண்டில் ஏற்பட இருக்கும் இரண்டாவது பெரிய புயல் இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் புயல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏன் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது?

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் புதிய புயல் உருவாவதற்கான சாத்திய கூறுகளை முன்பே கூறியிருந்தது. இந்த புயல் தமிழக கடற்கரை மாவட்டங்களில் கரையை கடக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் கஜா புயலுக்கு பிறகு தமிழகத்தில் கரையை கடக்கும் புயலாக இது உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 560 கி.மீ தொலைவில் திங்கள்கிழமை காலை 11:30 மணி வரை காற்றழுத்தமாகவே நிலை கொண்டிருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புயலாக வலுப்பெறும் போது ஈரானால் பரிந்துரை செய்யப்பட்ட நிவர் புயலாக இது அழைக்கப்படும்.

எப்போது புயலாக இது உருமாறும்?

செவ்வாய் கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும். அந்த நேரத்தில் காற்று மணிக்கு 70-80 கி.மீ முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும். புதன்கிழமை அன்று இந்த புயல் அதி தீவிர புயலாக உருமாறக் கூடும். அப்போது காற்று மனிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். புதன்கிழமை மதியம் இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே 120 கி.மீ வேகத்தில் இந்த புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ம்ருத்துன்ஜெய் மொஹபத்ரா கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரைக்கு இந்த புயல் எவ்வகையான பாதகமான சூழலை உருவாக்கும் ?

இந்த புயலால் அதிக பாதிப்பினை சந்திக்க உள்ளது தமிழ்நாடு. தீவிரமான வானிலை செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஏற்படும். கடுமையான புயல் வளர்ச்சியுடன் இணைந்து, வங்காள விரிகுடாவின் மேற்கு-தென்மேற்குப் பகுதிகளில் கடல் நிலைமைகள் மிகவும் மோசமானதாக மாறி புதன்கிழமை மிகவும் சாதகமற்ற நிலையில் இருக்கும். 20 செ.மீ அளவிற்கு மிகவும் கனமழை புதன்கிழமை என்று பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது ஐ.எம்.டி. வடக்கு மாவட்டங்கள் புதன்கிழமை அன்று 24 செ.மீ அதிகமான மழைப்பொழிவை பெறும்.

மேலும் படிக்க : சுமார் 120 கி.மீ வேகத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கும் நிவர் புயல்.. அடுத்து என்ன நடக்கும்?

ராயலசீமா, தெலங்கானா, ஆந்திர கடற்கரை பகுதிகள், தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் கர்நாடக உள் மாவட்டங்கள் நவம்பர் 24 முதல் 26 நாட்களில் 64 முதல் 115 எம்.எம். மழைப் பொழிவை பெறும். தெற்கு சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவும் இந்த புயலின் தாக்கத்திற்கு ஆளாகும். 26 மற்றும் 27 தேதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. திங்கட்கிழமை முதல், கடலில் காற்று வீசி வருகிறது. அடுத்த மூன்று நாட்களில் இதன் வேகம் அதிகரிக்கும்.

செவ்வாய் கிழமை தமிழக கடற்கரை பகுதிகளில் அன்று காற்றின் வேகம் மணிக்கு 65- 75 கி.மீ முதல் 85 கி.மீ வரை வீசக் கூடும். கடும் புயலாக மாறுகின்ற போது காற்றின் வேகம் அதிகரிக்கும். அப்போது தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 100 – 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை வீசக் கூடும். புயல் கரையை கடக்கும் போது ஒரு மீட்டர் உயரம் வரை கடலில் அலைகள் எழும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும். புதுச்சேரி மற்றும் சென்னை இடையேயான கடலோரப் பகுதிகளில் மட்டுமே புயல் பாதிப்பு ஏற்படுகிறது.  புதன்கிழமை அன்று, கடலில் 10 மீட்டர் உயரம் வரை அலை எழும்பும். கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்களுக்கு, படகுகளுக்கு மற்றும் துறை முகங்களுக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று மொஹப்த்ரா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

பாதிப்படைய இருக்கும் பகுதிகள் என்னென்ன?

தமிழக வடக்கு கடற்கரை மாவட்டங்கள் இதனால் பாதிப்பை சந்திக்கும். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய இடங்களில் செவ்வாய் கிழமை அன்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது புதுவை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஆந்திர கடற்கரை பகுதிகள், நெல்லூர், சித்தூர், தெலுங்கானா மற்றும் கர்நாடக உள்மாவட்டங்களில் இந்த புயல் காரணமாக 24 முதல் 26 தேதிகளில் கனமழை பொழியக் கூடும்.

தமிழகத்தில் இதனால் ஏற்பட இருக்கும் ஆபத்து என்ன?

நவம்பர் 25ம் தேதி வரை வங்க கடலின் தென்மேற்கு பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள் மற்றும் குடிசைகள் இதனால் சேதாரமாகும். மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள் தடைபெறும். மரங்கள் காற்றுக்கு விழும் சூழல் நிலவலாம். புயலால் ஊருக்குள் புகும் உப்பு நீரால் அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்கள் சேதம் அடையலாம்.