mk stalin twitter dmk Committee meeting : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதுக்குறித்து ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவ.23ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,திட்டமிட்டப்படி இன்று காலை கூட்டம் தொடங்கியது. இதில் 27 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன். அத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்;
1. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் .
2. உதயநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்து நீண்ட நேரம் காவல் துறை கட்டுப்பாட்டில் வைப்பது கண்டனத்திற்குரியது.
3 திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டத்திற்கும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உட்பட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மட்டும் காவல்துறை தடை போடுவதும், அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதிமுறைக்கு விடை கொடுத்து, அ.தி.மு.க.விற்கு ஒரு நியாயம் – தி.மு.க.விற்கு அநியாயம் என்ற மாறுபாடான நிலையும் அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது
4. காவல்துறையைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்தால், அதற்குத் துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களைத் தூண்டும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்
5. தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும், ஜனநாயகத்திற்குப் புறம்பான, இழிசெயலில், அ.தி.மு.க. அரசு காவல் துறையைத் தவறான வழி முறைகளுக்குப் பயன்படுத்தி வருவதை, இனியும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று இந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறது.