இந்த ஆண்டு, இந்தியா- இலங்கை இருதரப்பு உறவுகளை வலுவூட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இருநாடுகளும் கண்டுள்ளன.
முன்னதாக, இலங்கை பொருளாதார உச்சி மாநாட்டின் இருபதாவது பதிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், ” வளர்ச்சி சார்ந்த ஒத்துழைப்பு உறவுகளில் இலங்கையின் வலிமைமிக்க பங்குதாரராக இந்தியா திகழ்வதாகவும், அர்த்தமுள்ள உறவை தொடர்ந்து பேணிக்காக்க இந்தியா தயாராக உள்ளதாகவும் கூறினார்”.
இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம்இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்தா ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார்.
ராஜபக்சேவின் தலைமையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெற தொடங்கியது.
கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்ச இருவரும் மெய்நிகர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ” 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி இலங்கை தோட்டப் பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவடையச் செய்யவும், இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளில், பயனுள்ள வகையில், திறமையான மேம்பாட்டுக்கு இந்திய அரசு ஒத்துழைக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஒன்றுபட்ட இலங்கையில், இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமரசத்திற்கான பல்வேறு முறைகளை முன்னெடுத்துச் செல்வது உட்பட சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவை வேண்டும் என்று விரும்பும் தமிழ் மக்களின் விருப்பங்கள் குறித்து இலங்கை அரசு விவாதிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த பாஜபக்சே, ” தமிழர்கள் உட்பட அனைத்து இனவாத குழுக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை, பணிகளை மேற்கொள்ளும் என்றும், அரசியல் சாசன சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, இலங்கை மக்கள் அளித்துள்ள தேர்தல் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப அனைத்து குழுக்களும் சமரசத்தை அடையமுடியும் ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது.
இரு தரப்பு கடற்படைகள் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி உதவும். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் இலக ரக விமானங்களின் திறனையும், இந்த கூட்டு பயிற்சி வெளிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா, இலங்கை , மாலத்தீவு கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்றது. இதில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதற்கு தலைமை தாங்கினார். இந்தோ பசிபிக் கொள்கையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது.
மேலும், இலங்கையின் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு நடவடிக்கையை இந்திய ரிசேர்வ் வங்கி மேற்கொண்டது.
மீனவர்கள் பிரச்னை: இம்மாதத்தில், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக எதிர்க்கட்சிகளும், மீனவ அமைப்புகளுக்கும் தொடர்ந்து கைது நடவக்டிகையை கண்டித்து வருகின்றன.
இருதரப்பு வழியாகவும், இலங்கைக்கு அழுத்தும் கொடுத்தும், தொடர்ந்த கலந்தாலோசனைகளின் மூலமும் மீனவர்கள் தொடர்பான பிரச்னைக்கு தேர்வு காண தமிழக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.
source: https://tamil.indianexpress.com/international/india-srilanka-foreign-policy-india-srilanka-relationship-in-2020-239877/