வெள்ளி, 1 ஜனவரி, 2021

நல்லதை தொடங்க நாள் எதுக்குங்க?

 2020ம் ஆண்டு நம்முடைய வாழ்வில் மறக்கவே முடியாத மாற்றங்கள் நிறைந்த ஆண்டு தான். பலரும் பல்வேறு வகையில் கொரோனா நோய் தொற்று மற்றும் அதனால் உருவான ஊரடங்கால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருப்போம். அந்த மீளாத துயர நாட்கள் நமக்கு பல்வேறு பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கும். கொஞ்சம் ஸ்போர்ட்டிவாக அந்த பாடங்களை எடுத்துக் கொண்டால் நம் அனைவருக்கும் அது நன்மையில் முடியலாம்.

மருத்துவக் காப்பீடு

நம்முடைய உற்ற உறவினர்களை இழந்துவிடுவோம் என்று நாம் ஒரு போதும் யோசித்திருக்க மாட்டோம். வேலை இல்லாத நாட்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, பண வீக்கம் அதிகமாக இருக்கின்ற இது போன்ற நாட்களில் அவர்களுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டாலோ இரு பக்கமும் ஏற்படும் இழப்பு மிகவும் மோசமானதாகவே இருக்கும். எனவே உங்களின் குடும்பத்தாருக்கு மருத்துவக் காப்பீடு எடுப்பதை இந்த ஆண்டில் ஒரு குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளும் நாம் எடுக்கின்ற முக்கியமான ரெசலியூசன் என்னவென்றால் “ஹிட் தி ஜிம்” என்பது தான். ஆனால் அதன் பின் நாம் அந்த பக்கம் தலை வைத்தும் கூட படுப்பது கிடையாது. கொரோனா ஊரடங்கில் ஜிம் எல்லாம் மூடப்பட, சாப்பிட்டு சாப்பிட்டு, தூங்கி தூங்கி, உடல் எடை கூடியவர்கள் யாரென்று நமக்கு நம் கண்ணாடியை பார்த்தால் தெரியாதா? குறைந்த பட்சம் காலார 45 நிமிடம் நடத்தல். பவர் யோகா என்றால் 30 நிமிடங்கள். வாரத்திற்கு 5 நாட்கள் என்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

உணவு

செலவுகளை சிக்கனப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆண்டு முதல் சமைக்க கற்றுக் கொள்ளலாம். எப்போதும் ஸிவிக்கி மற்றும் ஸோமோட்டோக்கள் கை கொடுப்பதில்லை. சிறிய ஆரம்பம் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒரு தயிர் சாதத்தில் ஆரம்பித்தால் கூட இந்த வருடம் முடியும் போது நீங்கள் ஒரு செஃப் ஆக மாறிவிடுவீர்கள். “சமைத்தல் என்பது பாலின பொறுப்பாக எடுத்துக் கொண்டு பெண்களை மட்டும் சமையல்கட்டுக்குள் அனுப்பாமல், அனைவரும் சமைக்க கற்றுக் கொள்ளுவோம். ஊரடங்கின் போது அட சமைக்க தெரிஞ்சுருக்கலாம்” என்று நீங்கள் நினைத்தது எங்களுக்கும் தெரியும் ஃப்ரெண்ட்ஸ்.

ஓய்வு

உங்களின் உடலுக்கும் ஓய்வு மிகவும் முக்கியமானது. குடும்பமும் உறவுகளும் வேலையும் முக்கியம் தான். ஆனால் உங்களால் ஒன்று முடியாது என்று உங்களின் உடல் சொல்லும் போது அதை கேட்க மறுக்காதீர்கள். போதும் என்று தோன்றும் அளவுக்கு ஓய்வு எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் அனைத்தையும் தலையில் இழுத்து போட்டு செய்து கொண்டு அதனை பெருமைக்கான அடையாளமாக வைத்திருந்து ஒன்றும் ஆவப்போவதில்லை.

பயணம்

கலாச்சாரம், மக்கள், சுற்றுச்சூழல் என்று எதையாவது அறிந்து கொள்ள ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வு தேவை என்றால் தாராளமாக அழைத்துக் கொண்டு உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது நல்லது தானே.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஒரு முக்கியத்துவம்

புத்தம் படித்தல் : எப்போதுமே கையில் போன் அல்லது ஒரு டிவைஸ் என்பது எரிச்சலாக இருக்கிறது என்றால் புத்தகம் படியுங்கள். அல்லது தினமும் நான்கு பக்கம் எழுதுங்கள்.

ட்ரெக்கிங், ஹையாக்கிங், புதிதாக ஒரு மொழி கற்றுக் கொள்ளுதல், ஒரு இசைக்கருவி வாசிக்க கற்றுக் கொள்ளுதல், செடிகள் வளர்த்தல் என்று எத்தனையோ சிறப்பான பொழுது போக்கும் அம்சங்கள் உள்ளன. அதில் எதையாவது ஒன்றை நீங்கள் ஃபாலோ செய்து கொள்ளலாம். மேலும் வாரத்தில் ஒரு நாளாவது டிஜிட்டல் உலகில் இருந்து வெளியேறி டிட்டாக்ஸ் செய்ய பழகிக் கொள்ளுங்கள். புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.