கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்திற்கு 140 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லியில் 30 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய சஅமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது கேரளாவில் தற்போது இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ ராஜகோபால் கூறுகையில், “ஜனநாயக ஆத்மாவிற்கு ஏற்ப இந்த தீர்மானத்தின் நோக்கத்தை ஆதரித்தேன், ஆனால் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனை எனது உரையின் போது நான் சுட்டிக்காட்டினேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் ஒரு தீர்மானத்தை ஆதரிக்கும் ஒரு பாஜக எம்எல்ஏவாக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, “எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு ஜனநாயக அமைப்பில், சில சமரசங்கள் செய்யப்பட வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.. ”
தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் பிரணாயி விஜயன் கூறுகையில், சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, விவசாயிகளை ஏமாற்றும் இடைத்தரகர்களை ஒடுக்குவதற்கு, சேமிப்பு முறையை பரவலாக்குவதான் சிறந்ததே தவிர, விவசாயத்தை நிறுவனமயமாக்குவது தீர்வாகாது. விவசாயிகள் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் முழுமையாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியது அரசின கடமை. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை விட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேரளா காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோசப் கூறுகையில்,
“வட இந்தியாவில் விவசாயிகள் கடுமையான குளிர்காலத்தில் போராட்டம் நடத்துவது போல, கேரளாவிலும் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டும். மத்திய அரசு மாநிலத்தின் பொது விநியோக முறையை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கேரளா ரப்பர், தேங்காய், இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் போன்ற அனைத்து வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும், ”என தெரிவித்துள்ளார்.
source: https://tamil.indianexpress.com/india/resolution-against-agricultural-laws-kerala-bjp-support/