12 11 2021
Rain batters Tamil Nadu : 15 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, ரயில் போக்குவரத்தில் தாமதம், 6 மணி நேரத்திற்கு விமானம் தரையிறங்க தடை என்று அனைத்தும் அரங்கேறிவிட்டது. கடந்த 11 நாட்கள் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை மாலை மழை குறையத் துவங்கி, வெள்ள நீர் வடியத்துவங்கி, சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியது. வானிலை ஆராய்ச்சி மையம், வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் துவங்கியதால் வெள்ளிக்கிழமை முதல் மழையின் அளவு தமிழகம் மற்றும் ஆந்திராவில் குறையத்துவங்கும் என்று கூறியது. ஆனாலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை உருவாகி மேற்கு-வடமேற்கு பகுதி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரத்துவங்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழக விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1.45 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள், கடந்த இரண்டு வாரம் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சேதார மதிப்பானது முதன்மையானது. 44 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நீண்ட கால சம்பா நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள உண்மையான இழப்பை, வெள்ள நீர் வடிந்த பிறகே மதிப்பிட முடியும் என்று கூறினார்.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அக்டோபர் 1 முதல் 11 தேதி வரையிலான பருவமழை காலத்தில், இயல்பு நிலையைக் காட்டிலும் தமிழகத்தில் கூடுதலாக 56% மழை பெய்துள்ளது என்று கூறினார். இந்த 11 நாட்களில் பெய்த மழையின் அளவானது 405.12 மி.மீ ஆகும். 1,146 குடிசைகள் மற்றும் 237 இல்லங்கள் இந்த மழையால் சேதம் அடைந்துள்ளது. 157 கால்நடைகள் மரணம் அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். மோசமான காலநிலையால் வியாழக்கிழமை அன்றும் பெரும் மழை பெய்தது.
தண்ணீர் தேங்கியுள்ளதால், 1,000க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளை பெருநகர போக்குவரத்து கழகம் நிறுத்தியது. 12க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் தண்ணீரில் மூழ்கின. திருவள்ளூர் மாவட்டத்திற்கு செல்லும் மூன்று புறநகர் ரயில்கள் உட்பட உள்ளூர் ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
வேகமாக வீசிய காற்றின் காரணமாக பகல் 12.30 மணியில் இருந்து மாலை 06:00 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதை தடை செய்தது சென்னை விமானநிலையம். 10 விமானங்களின் வருகை மற்றும் 10 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் 4 விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நகரில் குறைந்தது 65,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மாலைக்குள் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநில மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பல உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார் முதல்வர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/rain-batters-tamil-nadu-14-deaths-in-11-days-368136/