11 11 2021 வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா கடற்பகுதிகும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று (நவம்பர் 11) மாலை கரையை கடந்தது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டாலம் சென்னை அருகே கரையைக் கடந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இந்த நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்துக்கு தொடரும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப்பகுதிகளில் தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மழைப்பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது. அதே சமயம் கனமழை மற்றும் காற்றுகான ரெட் அலர்ட் தொடர்கிறது. அதிகனமழைக்கான வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. ரெட் அலர்ட் காற்றுக்கும் கனழைக்கும் கொடுத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும், இன்று மழை விடும் என்றால் நாளை காலைக்குள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு நாங்கள் மிக வேகமாக பணிகளை செய்துகொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.
பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “தண்ணீரை வெளியேற்றுகிற வேலை மிக வேகமாக துரிதமாக நடந்துவருகிறது. அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மணிமங்கலம் சாலை முதல் தர்கா சாலை வரை உள்ள அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், அமுதம் நகர், ஸ்ரீராம் நகர், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு போகுமாறு எச்சரிக்கை செய்து அவர்களுக்கு தங்குவதற்கு வேண்டிய வசதிகளை எல்லாம் நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். அனைத்து மீன்பிடி படகுகளும் கடலுக்கு எங்கேயும் போகவில்லை. அது போக 48 படகுகளை வேண்டிய பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சிக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். அது போக, இன்று கூடுதலாக, மீட்பு பணிக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு பணிக்குழு அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புபடையின் 11 குழுக்கள், தமிழக அரசின் குழுக்கள் 4 ஆக மொத்தம் 15 குழுக்கள் களத்தில் இருக்கிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 185 முகாம்கள் அமைத்துள்ளோம். அதில் மொத்தம் 10,073 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை நகரில் மட்டும் 44 முகாம்களில் 2,249 பேர் தங்க வைத்திருக்கிறோம். இதுவரை 26 லட்சத்து 50,000 உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளோம். பொதுமக்களுக்கு உணவு வழங்குவதில் எந்தவிதமான சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதற்காக, சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 அதிகாரிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். சென்னை மாநகராட்சியைப் பொறுத்த அளவில், இன்றைக்கு பெய்த மழையின் காரணமாக 523 இடங்களில் நீர் தேங்கியுள்ளது. அதில் 46 இடங்களில் தேங்கியிருந்த நீரை அகற்றியிருக்கிறோம். மீதி 476 இடங்களில் நீற் வெளியேற்றும் பணி நடந்துகொண்டிருக்கிறது. 10 சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்த நீரையும் வெளியேற்றும் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். சென்னையில் மொத்தம் 230 மரங்கள் விழுந்திருக்கிறது. அதையும் நாங்கள் அப்புறப்படுத்தியிருக்கிறோம்.
சுகாதாரத் துறை மூலமாக மருத்துவ உதவி பெற்றவர்கள், சென்னை மாநகராட்சியில் 79 ஆயிரத்து 43 பேர் இந்த 4 நாட்களில் மருத்துவ உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். மீதி இடங்களுக்கு ஜேசிபி மீட்பு படகுகள் என்று சொல்லி எல்லாவிதமான, உபரகரணங்களோடு தயார் நிலையில் இருக்கிறோம். இன்று மழை விடும் என்றால் நாளை காலைக்குள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு மிக வேகமாக நாங்கள் அந்த பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.
யாரும் ரெட் அலர்ட் இல்லை என்று நினைக்க வேண்டாம். அதிகனமழைக்குதான் ரெட் அலர்ட் இல்லை. மிககனமழைக்கும் காற்றுக்கும் ரெட் அலர்ட் உள்ளது. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துகொண்டிருக்கிறது.” என்று கூறினார்.
13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இது நமக்கு ஒரு அனுபவம், அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கிறோம். மழை விட்டுவிட்டால், சென்னையில் முக்கிய சாலைகளில் தண்ணீர் குறைந்துவிடும். மிகவும் குறுகலான பகுதிகளில் தண்ணீர் இருக்கத்தான் செய்யும். அந்த தண்ணீரை மோட்டர் மூலமாக இறைத்து வெளியேற்றப்படும். எல்லா வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. மாநகராட்சியினர் முடிந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் தி.நகரில் 150 டன் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். பொதுமக்களும் அவர்களை நம்ப வேண்டும். அரசாங்கத்துடன் ஒத்திருக்க வேண்டும்.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/low-pressure-crossed-near-chennai/