சனி, 6 நவம்பர், 2021

விதிமீறல்; தமிழகம் முழுவதும் 2,000 வழக்குகள் பதிவு, 1,200 பேர் கைது!

 இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று, மற்றவர்களின் உடல் நலத்தைப் பணயம் வைத்து கொண்டாட்டத்தை நடத்த முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசுகளுக்கு முழுத் தடை இல்லை என்றாலும், பேரியம் உப்புகளைக் கொண்ட பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தியது.

முன்னதாக தீபாவளி பண்டிகை அன்று சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. இந்த உத்தரவு கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி தீபாவளி அன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 1,200 பேர் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 891 பேர் மீது வழக்குப்பதிவு…

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்த 891 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு 428 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாசு கடைகள் மீதும் வழக்குப்பதிவு…

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைப்பதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதற்காக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-new-in-tamil-tn-police-file-2000-cases-for-violating-sc-directive-on-firecrackers-365518/

Related Posts: