15 11 2021
Tamilnadu news in tamil: திருப்பதியில் 29வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தனது மாநிலம் தண்ணீர் வழங்கி வருவதாகவும், ஆனால், தமிழகம் தெலுங்கு கங்கை திட்டத்துடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் செலவுக்காக கடந்த 10 ஆண்டுகளாக எந்த தொகையும் செலுத்தவில்லை, ரூ.338.5 கோடி கடன்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்க்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தமிழகம் பாக்கி வைத்துள்ள தொகையை விரைவில் செலுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும்” – தமிழக முதல்வர் ஸ்டாலின்

மழை மற்றும் வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில் அவரது உரையை அமைச்சர் கே.பொன்முடி வாசித்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பவதாவது:-
நமது இரு மாநிலங்களும் உணவு, வானிலை மற்றும் பொதுவான மதிப்புகளை பகிர்ந்து கொள்கின்றன. எங்களது சகோதரர்கள் பலர் அண்டை மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களுடன் முழுமையாக அந்த மாநிலங்களுடன் இணைந்துள்ளனர்.
எங்களது அண்டை மாநிலங்களுடன் ஒத்துழைக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். பரஸ்பர நன்மையின் விளைவாக பிரச்சினைகளை ஆக்கபூர்வமான மற்றும் இணக்கமான முறையில் தீர்வு காணவும் முயன்று வருகிறோம்.
அதேவேளையில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம். ஆனால், அன்பின் மொழி மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மாநிலங்கள் அமைதியான முறையில் முன்னேற முடியும்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமையின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் பங்களிப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் மீதான மாநில உரிமைகள் மற்றும் அதன் சுயாட்சிக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்தாலும், வலுவான தேச உணர்வுடன் கூட்டாட்சி முறையை தமிழ்நாடு எப்போதும் நம்புகிறது.
இந்தியாவின் அழகு அதன் பன்முக கலாச்சாரம் மற்றும் அதன் உள்ளடக்கத்தில் உள்ளது. இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் பரந்த கடலோர காற்றாலை ஆற்றலைப் பெறுவதற்காக மாநிலம் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் இருந்து தமிழகதிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-in-tamil-tn-owes-andhra-rs-340-crore-jagan-mohan-reddy-at-zonal-meet-369388/