செவ்வாய், 16 நவம்பர், 2021

அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறு பேசியதாக வழக்கு:

 15 11 2021 இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் குறித்தும் அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது தொடரப்பட வழக்கில், அவர் இன்று (நவம்பர் 15) ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவ்வப்போது அதிரடியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி பரப்பு ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில், 2018ம் ஆண்டு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் குறித்தும் அவர்களின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக அவர் மீது வழகுப்பதிவு செய்யப்பட்டது.

ஹெச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அனுப்பிய சம்மனைப் பெற்றுக்கொண்ட ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால், நீதிமன்றம் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் பிடி வாரண்ட் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா மீதான வழக்கு இன்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடைபெற்றது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-appeared-in-court-in-the-case-of-slandering-hrce-officials-369792/