ரபேல் போர் விமானத்தைத் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், 7.5 மில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் ரூபாய். 64.26 கோடி பணத்தை) இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சுசேன் குப்தா என்பவருக்கு கொடுத்திருப்பதற்கான புதிய ஆதாரங்களைப் புலனாய்வு செய்தி வெப்சைட் மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
மொரீஷியசில் சுசேன் குப்தா போலியான துவக்கிய ‘இன்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்திற்கு 2004 முதல் 2013 வரையிலான காலத்தில் தான் இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட போலியான இன்வாய்ஸை, மொரீஷியஸின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் 2018 அக்டோபர் 11 அன்று சிபிஐக்கு அனுப்பியதாக மீடியாபார்ட் கூறுகிறது. அவர்கள் சிபிஐக்கு அனுப்பிய கடித்ததையும் மீடியாபாட் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், அச்சமயத்தில் ரபேல் போல் விமானம் வாங்குவதில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.மீடியாபார்ட் ரிப்போட் குறித்து சிபிஐ, பாதுகாப்பு அமைச்சகம், டசால்ட் ஏவியேஷன் ஆகியவை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை

மீடியாபார்ட் தனது புலனாய்வு அறிக்கையில், ” ரபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சுஷேன் குப்தா இடைத்தரகராக செயல்பட்டதை இந்திய துப்பறியும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவரது மொரிஷியஸ் நிறுவனமான Interstellar Technologies, 2007 மற்றும் 2012 க்கு இடையில் பிரெஞ்சு விமான நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் 7.5 மில்லியன் யூரோக்களைப் பெற்றுள்ளது.
ஐ.டி., ஒப்பந்தங்கள் என்ற பெயரில் போலி ஆவணங்கள் வாயிலாக மொரீஷியஸ் நிறுவனத்திற்குப் பணம் அனுப்பியுள்ளார். பல இன்வாய்ஸ்களில் பிரான்ஸ் நிறுவனத்தின் பெயர் தவறாக இருந்தது” என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரலில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குப்தா, இந்திய விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு ரகசிய ஆவணங்களை வழங்கியதாக மீடியாபார்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அதற்குப் பதிலாக 2016ம் ஆண்டில் மொத்தம் ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. பா.ஜ.க.வின் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் காங்கிரசும், ராகுல் காந்தியும் பல ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வந்தனர்
உச்சநீதிமன்றத்தில் 2018இல் இது தொடர்பாக வழக்கு நடைபெற்ற நிலையில், ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. சிபிஐ-யும் மீடியாபார்ட் அறிக்கை குறித்து விசாரணை ஆர்வம் காட்ட வில்லை எனக் கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/rafale-maker-paid-7-5-million-euro-to-middleman-said-by-french-portal/