ஆப்கானில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை வரும் நவம்பர் 10ஆம் தேதி நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என அறிவித்தது.
தற்போது, ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவில்லை என சீனா அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, திட்டமிடுவதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதற்கு தலைமை தாங்க உள்ளார். மீட்டிங்கில் கலந்துகொள்ள சீனா மறுத்தாலும், இருதரப்பு ராஜதந்திர வழிகள் மூலம் தொடர்பு மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ள தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்து எழும் சவால்கள் மற்றும் எல்லைக்குள் உள்ளேயும் வெளியேவும் நிலவும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும், போதைப் பொருள் கடத்தல், அமெரிக்க விட்டு சென்ற ஆயுதங்களின் பயன்பாடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளில் சிலர், பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, உயர் அதிகாரிகள் அமிர்தசரஸ் மற்றும் ஆக்ராவிற்கு விசிட் அடிப்பார்கள் என கூறப்படுகிறது.
கிடைத்த தகவலின்படி, இதுவரை தாலிபான்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. ஏனெனில், கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் இதுவரை தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை அல்லது சட்டப்பூர்வமாக்கவில்லை.
இந்தியா திட்டமிட்டிருக்கும் மாநாட்டிற்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளும் ரஷ்யாவும் ஈரானும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் கூட்டத்தில் அனைத்து மத்திய ஆசிய நாடுகளும் பங்கேற்பது இதுவே முதல் முறை. ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பிராந்திய முயற்சிகளில் இந்தியாவின் பங்கிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகும் என கருதப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/after-islamabad-now-beijing-to-skip-new-delhi-meeting-on-kabul/