ஹுசூராபாத் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தெலங்கானா தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நர்சிங் ராவ், இடைத்தேர்தலில் வெறும் 3,012 வாக்குகளை பெற்றுள்ளார். இவரின் படுதோல்விக்கு முன்னாள் மாநிலத் தலைமையே காரணம் என்று கட்சித் தலைவர்களில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போதைய இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் முதலமைச்சரும் டிஆர்எஸ் தலைவருமான கே சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட முறிவுக்குப் பிறகு காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், மாநிலத்தின் அப்போதைய காங்கிரஸ் தலைமை இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி , சோனியா காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விசிட்டால் பரபரப்பு
பாஜக அண்மையில் கர்நாடகா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் முதலமைச்சரை மாற்றியுள்ளதால், எந்தவொரு மாநில முதலமைச்சரும் கூட்டத்திற்காக டெல்லி சென்றால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், தற்போது இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தலில் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இந்த வார இறுதியில் ஜெய்ராம் தாக்கூர் சில கூட்டங்களுக்காக டெல்லி செல்கிறார். எனவே, 2022 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அவருக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இடைத்தேர்தல் முடிவுகளின் பின்னணி குறித்து ஆய்வு செய்யவே மேலிட தலைவர்களைச் சந்திக்க அவர் வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதவும் கரங்கள்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஜூலை 7 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களிடம், இதற்கு முன்பு அந்த பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது அமைச்சராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக அந்த துறையின் முன்னோடிகளுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தினர். ஆனால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், தனது முன்னோடியின் ஆலோசனைகளை தற்போது தொடர்ச்சியாக பெற்று வருகிறார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்ட மன்சுக் மாண்டவியாவிடம் தனது அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்காக சோனோவால் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாண்டவியா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது ஆதரவை அமைச்சகத்திற்கு அளித்து வருகிறார்.
source https://tamil.indianexpress.com/india/congress-performing-poorly-make-an-upset-to-sonia-gandhi-now-wants-an-explanation/