நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது.
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை நடிகர் சூர்யா முன் வைத்தார்
இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட சூர்யா, “படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிலடி கொடுத்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் திருமாவளவன் பரபரப்பு ட்வீட் கருத்துக்களையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது. திரௌபதி படம் குறித்து திருமா அளித்த பதிலையும், ஜெய்பீம் படம் குறித்து அன்புமணி எழுப்பிய கேள்வியையும் ஒப்பிட்டு, விஜய் என்ற நபர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அந்நபர், ” திரௌபதி படத்துல ஒரு கேரக்டர் அச்சு அசலா திருமாவளவன் மாதிரிதான் காட்டி எடுத்து வெச்சிருப்பார் இயக்குனர் மோகன் ஜி . அது பத்தி திருமா கிட்ட கேட்டப்போது, “அந்த படத்தை நான் பார்க்கல.. பார்க்க எனக்கு நேரமும் இல்ல. அது பத்தி கருத்து சொல்ல ஒன்னும் இல்ல”னு சொல்லி முடிச்சிட்டார்.

அதை விசிக காரங்க பெருசு பண்ணியிருந்தாங்கன்னா பெரிய சட்டம் ஒழுங்கு, சாதிக்கலவரம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். தன் கட்சியினரை அதை எளிதாக கடந்து போக சொல்லிட்டார். அதுதான் தலைமை பண்பு.
அன்புமணி அப்பாவி வன்னியர் இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டி விடுகிறார். பாவம் அவர்கள்” என்று பதிவிட்டிருந்தார்” என பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு வைரலான நிலையில், தொல். திருமாவளவன் அதனை ரீட்வீட் செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பதிவிட்ட அந்தப் பதிவில், ” கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி.
இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.