கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் (14 11 2021 ) 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும், நவம்பர் இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 6000 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடப்படுகின்றது எனவும், சென்னை மட்டும் 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மழை நீர் தேங்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3,122 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாக தற்போது வரை 2.43 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
நீர் தேங்கிய இடங்களுக்கு மருத்துவ குழுவினர் வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர். இந்த நடமாடும் மருத்துவ சேவையானது இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,500 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
sourcee https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-mega-vaccination-camp-in-tn-on-november-14-says-minister-ma-subramaniam/