13 11 2021 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையில் சென்னை மாநகராட்சி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது
சென்னையில் கனமழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிள்ள நிலையில் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ள நீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேளச்சேரியை சுற்றியுள்ள கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வெள்ள அபாயம் மக்கள் மத்தியில் தொற்று நோய் பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கீழ்க்கட்டளைக்கு அருகில் உள்ள நன்மங்கலம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தற்போது போதுமான பாதுகாப்பும் சுகாதாரமும் இல்லை என்று பொதுமக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது பெய்த கனமழையின் காணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்பு பெருமளவு இல்லாவிட்டாலும், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிரத்திற்கு உள்ளாகியுள்ளது. அதிகமாக இடங்களில் மழைநீர் தண்ணீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் அதிகரித்துள்ள நிலையில், கொசு உற்பத்தி அதிகமாவதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களுக்கு தங்களை தாக்காமல் இருக்க பொதுமக்கள் தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நன்மங்கலத்தில் அமைந்துள்ள வீரமணி நகரில் குப்பைகள் சீராக அகற்றப்படாத நிலையில், மக்கள் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால், இந்த நிலை மோசடைந்து வருவதாகவும், இதற்காக அரசு தக்க நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.