திங்கள், 13 டிசம்பர், 2021

1966 விமான விபத்தில் ஆல்ப்ஸ் மலையில் புதைந்த, இந்திய ரத்தினங்கள்;

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 19 அன்று, ஆல்ப்ஸில் உள்ள மோன்ட் பிளாங்கின் அடிவாரத்தில் உள்ள பிரெஞ்சு ரிசார்ட் பகுதியான சாமோனிக்ஸ் முனிசிபாலிட்டி, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஆல்ப்ஸ் மலையில் புதைந்து கிடந்த இந்தியாவின் ரத்தினங்களைக் காட்சிப் படுத்த உள்ளது. ஜனவரி 24, 1966 அன்று மோன்ட் பிளாங்க் உச்சிமுகட்டிற்கு அருகே விபத்துக்குள்ளான மும்பை-ஜெனீவா ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இந்த இரத்தினங்கள் இருந்தன. இந்த விமான விபத்தில் அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கிர் பாபா உட்பட அனைத்து 117 பயணிகளும் உயிரிழந்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி “கன்ஜன்ஜங்கா புதையல் காட்சிப்படுத்தல் (Kangchenjunga Treasure Revealed)” என்ற முகநூல் பதிவில், Chamonix-Mont-Blanc முனிசிபாலிட்டி கூறியது, “1966 ஆம் ஆண்டில், மாண்ட்-பிளாங்க் மாசிப் பகுதியில் கன்ஜன்ஜங்கா, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 117 பேர் உயிரிழந்தனர். 2013 ஆம் ஆண்டில், பாஸ்சன் பனிப்பாறையில் மரகதங்களும் மாணிக்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ரத்தினங்களுக்கு சொந்தமானவர்களின் வாரிசுகளுக்கான தேடுதல் பலனளிக்காத நிலையில், சாமோனிக்ஸ் நகராட்சிக்கும் கண்டுபிடித்தவருக்கும் இடையே கற்கள் இந்த வாரம் பகிரப்பட்டன.

தி வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு அறிக்கை, 2013 இல், ஒரு இளம் மலையேறுபவர், ஒரு பனிப்பாறையின் மீது ஏறி, அதில் “மேட் இன் இந்தியா” என்று எழுதப்பட்ட ஒரு பெட்டியைக் கண்டுபிடித்தார். உள்ளே, அவர் மரகதம் மற்றும் நீலமணிகளைக் கண்டுபிடித்தார், அதை அவர் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்தார் என்று குறிப்பிட்டது.

“எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளின் வாரிசுகளைக் கண்டுபிடிப்பதற்கான அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால், நாட்டின் கிழக்கு விளிம்பில் உள்ள இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்துடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் சாமோனிக்ஸ் என்ற பிரெஞ்சு கிராமத்துடன் ரத்தினங்களைக் கண்டறிந்த மலையேறுபவர் புதையலைப் பகிர்ந்துக் கொள்வார் என்று அதிகாரிகள் அறிவித்தனர்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சாமோனிக்ஸ் நகர அதிகாரிகளின் பேஸ்புக் பதிவில், நகராட்சியின் ரத்தினங்களின் பங்கு சாமோனிக்ஸ் கிரிஸ்டல் மியூசியத்தில் வைக்கப்படும், இது டிசம்பர் 19 முதல் அதன் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என பதிவிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, சாமோனிக்ஸ் மேயர் எரிக் ஃபோர்னியர், ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்ஸிடம், ரத்தினங்களின் உரிமை குறித்த கேள்விக்கு பதில் கிடைத்ததில் தான் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாகக் கூறினார். சட்டப்படி, புதையலை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் மலையேறுபவரின் “நன்னடத்தை” குறித்து அவர் பாராட்டினார், என்று அறிக்கை கூறுகிறது.

“இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சில நகைகளைப் பெறுவார் என்று அறிந்த பிறகு, மலை ஏறுபவரான லு பாரிசியன் செய்தி நிறுவனத்திடம் ‘நேர்மையாக இருந்ததற்கு வருத்தப்படவில்லை’ என்று கூறினார், மேலும் அவற்றை விற்று வரும் பணத்தில் தனது குடியிருப்பை புதுப்பிப்பதாகக் கூறினார்,” என்று அறிக்கை கூறுவதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக விபத்துக்கான காரணத்தை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்தனர். விமானி தரையிறங்குவதற்காக கீழே இறங்கியபோது மலைத்தொடரை ஏற்கனவே கடந்துவிட்டதாக விமானி நினைத்ததால் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர். விமானி, விமானம் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்குத் தகவல் தெரிவித்தார்; ஆனால் ஒரு கட்டுப்பாட்டாளர் விமானத்தின் உண்மையான இருப்பிடத்தை விமானிக்குக் கொடுத்தாலும், அந்தத் திருத்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.


source https://tamil.indianexpress.com/india/alps-1966-plane-crash-made-in-india-gems-on-show-382096/