மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தனது பணிகளை முடித்து வெளியேறும் நிலையில் அரசு அதிகப்படியான பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தின் திசையை திருப்பி இருக்கிறது. இது அரசின் திறனை தொடர்ந்து வீணடிப்பதற்கு சமமானது. இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு அதிக தேவைகள் இருந்தால் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்.
அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வெளியேறும் நிலையிலேயே இந்த விவாதம் தொடங்கிஇருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்திய அரசின் பொருளாதாரம் திடீரென தலை கீழாக மாறிவிட்டதா? அல்லது நாம் இரட்டை இலக்க வளர்ச்சியை நோக்கி சென்று விட்டோமா?
2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஜூலை முதல் செப்டம்பர் வரை) வளர்ச்சியின் புள்ளியியல் துறை (CSO) மதிப்பீடுகள் அரசுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே நேரத்தில் இந்த இரண்டாம் காலாண்டிற்கான உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பு (GDP) வளர்ச்சி விகிதம் 8.4 சதவிகிதம் என்பது முந்தைய ஆண்டின் இதே காலாண்டின் 7.4 சதவிகிதம் என்ற விகிதத்தில் தான் இருந்தது. 2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வளர்ச்சியின் 20.1 சதவீதத்தை விட தொடர்ச்சியாக, குறைவாக இருந்தாலும் கூட இதை நாம் வித்தியாசமாக நினைக்க முடியாது.
வரி வசூல், கைபேசி பரிவர்த்தனைகள், மின்னணு வழி கட்டண முறை, ரயில்வே சரக்கு போக்குவரத்து, மின்சார நுகர்வு போன்ற உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் என்று அழைக்கப்படும் எண்கள் அரசாங்கத்தின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்துள்ளன. ஆனாலும் இவை இவை அனைத்தும் வெறும் எண்கள் மட்டுமே. இதை வைத்து மக்களின் பொருளாதாரத்தை மதிப்பிட இயலாது.காரணம் இவை அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்து விட்டதா என்ற கேள்விக்கு எந்த ஆதாரமும் இல்லை.
முன்கூட்டியே கொண்டாட்டம்
வெற்று அறிக்கைகளுடன் நிதிஅமைச்சக அதிகாரிகள் மகிழ்ச்சிக்கடலில் மிதந்த போது பிறதுறை அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட இதை மௌனமாகவே எதிர்கொண்டனர். மக்களும் இதை கொண்டாட வில்லை. இதற்கு காரணம் அரசின் புள்ளியியல் துறை மதிப்பீடுகள் குறித்த தலைப்பு செய்திகள் சில நாட்களிலேயே மறைந்து பெட்ரோல், டீசல், எரிவாயு, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் இதனால் சந்தைகளில் ஏற்பட்ட மந்த நிலையும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தது தான்.
இந்த புள்ளியியல் மதிப்பீடுகள் மக்கள் போதுமான அளவு உணவுப் பொருட்களை வாங்கவில்லை மற்றும் போதுமான அளவு உட்கொள்ளவில்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டியது. நுகர்வோரை பொறுத்த வரையில் சொல்லப் படும் நான்கு இயந்திரங்களில் வளர்ச்சியின் முதன்மையான இயந்திரம் தனிநபர் நுகர்வின் அளவீடு தான். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 55 சதவீதம் ஆகும். கோவிட் பரவலுக்கு முந்தைய ஆண்டுகளில் (2018-19 & 2019-20), பாதிக்கப்பட்ட ஆண்டில் (2020-21) மற்றும் மீட்பு ஆண்டு (2021-22) எனும் மூன்று காலகட்டங்களில் தனியார் நுகர்வு எவ்வளவு இருந்தது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.
கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் தனியார் நுகர்வு
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டு இரண்டிலும் தனியார் நுகர்வு என்பது , 2019-20 இல் இருந்த தனியார் நுகர்வை விட குறைவாகவே உள்ளது. இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இந்த நடப்பு ஆண்டின் அரை ஆண்டு மொத்த நுகர்வு 2018-19 அரை ஆண்டின் மொத்த நுகர்வை விட குறைவாக உள்ளது. மேலும், 2019-20ல் ரூ.71,28,238 கோடியாக இருந்த 2021-22 அரையாண்டின் மொத்த நுகர்வு (ஜிடிபி) ரூ.68,11,471 கோடியாக உள்ளது. இவை கோவிட் தொற்றுக்கு முந்தைய அளவை அடைவதற்கு மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
செலவினங்களில் சிக்கனம்
கோவிட் தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை விட, மீட்பு ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் மக்கள் ஏன் குறைவாக உட்கொள்ளுகிறார்கள்? இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மேலும் இது பெரும்பான்மையான மக்களுக்கு பொருந்தும்.
தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் மக்கள் ஏழைகளானது
மக்களின் வருமானம் குறைந்தது
மக்கள் வேலை இழந்தது
மக்கள் தங்கள் வணிகங்களை நிறுத்தியது
மக்களின் செலவழிக்கும் திறன் குறைந்தது
மக்கள் குறைந்த அளவில் செலவழிக்க ஆரம்பித்தது
மக்கள் அதிக விலை உயர்வால் பாதிக்கப் பட்டது
மக்கள் அதிகமாக சேமிக்கத் தொடங்கியது .
என் பார்வையில், “மேலே உள்ள அனைத்தும்” சரியான காரணங்களாக படுகின்றன. இதில் பலருக்கு குறைந்த வருமானமே உள்ளது, பலர் வேலை இழந்துள்ளனர், அதிக வரி (எரிபொருள் வரி, ஜிஎஸ்டி விகிதங்கள்) காரணமாக பலர் தமது வியாபாரத்தை இழந்துள்ளனர். பலர் வணி க வளாகங்களை மூடி விட்டனர். பலரும் கரோனாவால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் அதிகமாக சேமிக்க ஆரம்பித்தது விட்டனர். இவை அனைத்தும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்கள்.
பல குடும்பத்தினருடனும் நான் பேசிய போது, ‘நானோ அல்லது என் குடும்பத்தில் ஒருவரோ வைரஸால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது’ என்ற வார்த்தைகளில் பயம் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வயது வந்தோரில் 50.8 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியின் இரண்டு கட்டங்களையும் முடித்துள்ளனர். 85.1 சதவீத மக்கள் முதல் கட்ட தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் சுமார் 15 கோடி பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்படாததால் அவர்களிடையே ஒரு வித பயம் உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. பெரிய இடத்து திருமணங்கள், விடுமுறை நாட்களால் நிரம்பிய விமானங்கள், ஆடம்பரமாக உணவகங்களில் நடமாடுவது போன்ற நிகழ்ச்சிகள் பெரிய நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளிலேயே முடங்கி விட்டன. கிராமங்களில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அவர்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் அல்லது கவலையில் இருக்கின்றனர்.
தவறான மருந்துச்சீட்டு
நமது அரசு பணிநிறைவு பெறப்போகும் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் தலைமையிலான அரசாங்கமாகவே செயல் பட்டு வருகிறது. அதிகப் படியான தேவைகள் இருந்தால் மட்டுமே அதிகப் படியான நுகர்வு நடக்கும். ஆனால் அரசு அது குறித்து சிந்திக்காமல் அதிகப் படியான நுகர்வை ஊக்குவிக்கிறது. ஆனால் தேவை குறைவாக இருக்கும் போது உற்பத்தியாளர்களின் உற்பத்தியும் விநியோகஸ்தர்களின் பங்களிப்பும் குறைவாகவே இருக்கும். இதற்கு வாகனத் துறையில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையே சாட்சி. முக்கியமாக இருசக்கர வாகனங்களின் உற்பத்தி குறைந்துள்ளது.
பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்யும் மருந்து
மோடி அரசாங்கம் பல நேரங்களில் மக்களால் கேலி செய்யப் படுகிறது. புறக்கணித்தலும் நடக்கிறது. அடிமட்ட மக்களிடம் தேவையைத் தூண்டுவது. எரிபொருள்கள் மற்றும் வேறு சில பொருட்களின் மீதான வரிகளை குறைப்பது என்று நான் தொடர்ந்து தொடர்ந்து வாதிட்டேன்; மிகவும் ஏழைகளுக்கு உதவும் வகையில் மூடப்பட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை மீண்டும் தொடங்குவதற்கும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் நிதி உதவி செய்யும் படி தொடர்ந்து வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்திருக்கின்றன .
இதன் விளைவாக மேல்மட்ட மக்களில் 1 சதவீதத்தினர் பெரும் பணக்காரர்களாகவும், அடுத்த மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினர் பணக்காரர்களாகவும், கீழ்மட்ட மக்களில் 50 சதவீத மக்கள் ஏழைகளாகவும் மாறியுள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகளை ஆழமாகப் பார்க்காமல், புள்ளியியல் அறிக்கைகளாகவே பார்க்கும் இந்த அரசுக்கு காது கேட்காதது மட்டுமல்ல காதே கிடையாதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.
தமிழ் மொழியாக்கம்: த.வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/only-two-cheers-for-the-economy-382526/