முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 2018 அன்று, அப்போதைய அதிமுக அரசால் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரிந்துரைக்கு காலம் தாழ்த்திய முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தீர்மானத்தை அனுப்பியதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், நளினி உள்ளிட்டோர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். தவிர, ஆளுநரின் செயலற்ற தன்மை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படத் தவறியது என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இது தொடர்பாக நளினி கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் செயல்படத் தவறியது “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்றும், தன்னை வேலூர் மத்தியச் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரி இருந்தார்.
மேலும், மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இதுவரை 3,800 ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் நளினி அளித்த மனுவில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். “நளினி செய்த மனு சரியான மனு அல்ல. நளினி உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்பது அரசின் நிலைப்பாடு அல்ல. இது தேவையற்ற மனு என்பதாலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதாலும் நாங்கள் அதை எதிர்த்தோம்.
தமிழக அமைச்சரவையின் முடிவு ஏற்கனவே ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையால் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது மிகையாகிவிடும்,” என்றார்.
முன்னதாக, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எம்.ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு தனது கவுன்டரில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளதாகவும், தனது கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மற்றொரு குற்றவாளியும் இதேபோன்ற மனுவை முன்வைத்துள்ளதால், தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், இந்த வழக்கில் அரசு எதிர் மனு தாக்கல் செய்ய மூன்று வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-assassination-case-tamil-news-tn-govt-denies-any-change-of-its-stand-376432/