முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அதிமுக அரசு மாற்றி சித்திரை 1ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தது. முதலமைச்சரின் பொங்கல் பரிசுத் தொகுப்பு துணிப்பையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வழ்த்துகள் என்று அச்சிடப்பட்ட புகைப்படம் வெளியானதால் திமுக அரசு தமிழ்ப் புத்தாண்டு தேதியை மீண்டும் மாற்றுகிறதா என்ற கேள்விகளும் குழப்பமும் எழுந்துள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2008ம் ஆண்டு, தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. தை 1ம் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என்று கூறப்பட்டது.
திமுகவை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, சித்திரை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தது. அதற்கு பிறகு, சித்திரை 1ம் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது.
பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த சூழலில்தான், மிண்டும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை எழத் தொடங்கியுள்ளது. இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயருடனும் தமிழக அரசின் முத்திரையுடனும் உள்ள ஒரு துணி கைப்பை புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த துணிப்பை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்களுடன் கூடிய பொங்கள் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான கைப்பையாக இருக்கும் என்றுதெரியவந்துள்ளது.
இதனால், 2008ம் ஆண்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1ம் தேதியில் இருந்து தை 1ம் தேதிக்கு மாற்றப்பட்டதைப் போல, 2022ல் வருகிற தை 1ம் தமிழ்ப் புத்தாண்டாக மாற்றப்பட உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், தமிழக அரசு 2022-ல் தை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என அறிவிக்க உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில், தை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு தரப்பினரும் சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாக விவாதித்து வருகின்றனர். இந்த விவாதத்தையும் சர்ச்சையையும் ஒரு துணி கைப்பை புகைப்படம் மீண்டும் எழுப்பியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/which-is-tamil-new-year-date-thai-1st-pongal-or-chitthirai-1st-triggers-controversy-pongal-gift-bag-376679/