14 12 2021 சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்ததற்காக மதுரை நகர சைபர் கிரைம் போலீஸார் யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்த எஃப்ஐஆரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி (emoji) போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வைரலாகி பரவியதை தொடர்ந்து அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் மீது 124 (A) (தேசத்துரோகம்), 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள்), 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) போன்ற IPC பிரிவுகள் மற்றும் IPC 505 (ii) மற்றும் 505 (i)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் இந்த வழக்கில் செய்யப்படவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மாரிதாஸ் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், மற்றொரு மோசடி வழக்கிலும் கைதாகியுள்ளதால், சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/hc-madurai-bench-quashes-case-against-youtuber-maridhas-383164/