தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவரான ர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கட நாராயணா-வுக்கு விஜய் வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமனம் செய்த முதல்வர் விஜய் அரசுக்கு தி.மு.க எம்.பி-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
"தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?” - கனிமொழி கேள்வி
இந்நிலையில், தி.மு.க எம்.பி., கனிமொழி முதல்வர் விஜய்க்கு இரண்டு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது குறித்த சமூக வலைதள பதிவில், "இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-karunanidhi-venkat-narayana-vijay-govt-appointment-tamil-news-12111439





