தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவரின் முதன்மையான மற்றும் முக்கியப் பணி, தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசிற்கும் இடையே ஒரு சுமுகமான பாலமாகச் செயல்படுவதுதான். மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்னைகளை டெல்லி அளவில் கொண்டு சென்று, அதற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதே இப்பதவியின் நோக்கமாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைப் பிரச்னை போன்ற பல முக்கிய விவகாரங்கள் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடனும், தமிழ்நாட்டின் உரிமைகளுடனும் நேரடியாகத் தொடர்புடையவை ஆகும். குறிப்பாக, காவேரி மற்றும் மேகதாது விவகாரங்களில் நாம் என்னதான் எதிர்ப்புகளைப் பதிவு செய்தாலும், 'நாங்க மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவோம்' என்று கர்நாடக அரசு மிகவும் பிடிவாதமாக இருந்து வருகிறது. இது தற்போதைய சூழலில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் நின்று வாதாட வேண்டிய ஒரு முக்கிய பதவிக்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, அங்கேயே வசிக்கும் ஒருவரை நியமித்திருப்பது நியாயமா என்று செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரால் எப்படி காவேரி, மேகதாது போன்ற நதிநீர் விவகாரங்களில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாகவும், நடுநிலையாகவும் நின்று பேச முடியும்? இந்த அதிரடி நியமனத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பும் கூட, 'ரத்தன்' என்பவரை சிறப்பு பிரிவு (அரசியல்) அதிகாரியாக த.வெ.க அரசு நியமித்தது. பின்னர், அதற்குப் பல தரப்பிலிருந்தும் எழுந்த பலத்த எதிர்ப்புகள் காரணமாக அந்த அரசு ஆணையை (GO) வாபஸ் பெற வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, இதுபோன்ற அடுத்தடுத்த குழப்பங்கள் எதற்கும் இடம்தராமல் நேர்மையான முறையில் நிர்வாகத்தை நடத்த வேண்டும். எனவே, கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்துள்ள இந்த முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த நியமனத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகச் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய செல்வபெருந்தகை, சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அருவருக்கத்தக்கவை மற்றும் அநாகரிகமானவை. சட்டமன்றம் என்பது திரைப்படப் பிடிப்பு நடக்கும் இடம் கிடையாது; அது ஒரு மேன்மைமிக்க, மாண்புமிக்க மற்றும் வரலாற்று சிறப்புமிக்க அவை . அங்கு போய் கையை நீட்டி அநாகரிகமாக பேசுவதையும், கொச்சைப்படுத்துவதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகவும், இந்த சன் நியூஸ் வாயிலாகவும் எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன் என்று சாடினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சாதனைகளை யாராலும் மறைக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்று குறிப்பிட்ட அவர், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலினின் பெயர்களை இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளவரை வரலாறு பேசும். இவர்களின் வரலாற்றை இன்னொரு முதலமைச்சர் வந்து ஒழித்துவிட முடியாது. டேட்டாபேஸ் புள்ளிவிவரங்களின்படி, மு.க.ஸ்டாலின் போலத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வந்து பணியாற்றிய, மாவட்ட வாரியாகத் தீவிரமாகப் பயணம் மேற்கொண்ட வேறு எந்த முதலமைச்சரும் இல்லை. 2-ம் உலகப் போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் கூடத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார், அதற்காக அவரது வரலாற்றை மறைக்க முடியுமா? அதேபோல்தான் அண்ணன் தளபதியின் வரலாற்றையும் யாராலும் மறைக்க முடியாது என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/how-can-a-karnataka-native-defend-tamil-nadus-rights-selvaperunthagai-slams-tvk-govt-reconsider-delhi-representative-appointment-12110182





