செவ்வாய், 30 ஜூன், 2026

துணைவேந்தர் நியமன சட்டம் வழக்கு: ஜூலை 29-ல் இறுதி விசாரணை - ஐகோர்ட் உத்தரவு

 

chennai high court 2x

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை, வரும் ஜூலை 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்குப் பதிலாக, மாநில முதலமைச்சருக்கே இருக்கும் வகையில் திமுக அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்ட நடைமுறைக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் புதிய துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்கியதோடு, பிரதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது விரிவான பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vice-chancellor-appointment-law-case-final-hearing-postponed-to-july-29-madras-high-court-12118558