பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டைகளில் (ID Card) சாதி விவரங்கள் இடம் பெறுமா என்பது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெளிவான விளக்கமளித்துள்ளார்.
மாணவர்கள் ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில்,
”இப்போ பள்ளிக்குச் செல்லுகிற குழந்தைகள் அனைவருக்கும் ஜாதி சான்றிதழை வாங்குவதற்கு, மாற்றத்தை உருவாக்குவதற்காக நடவடிக்கை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். 'ஐ.டி. கார்டு' என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
10, 12 ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களின் முகவரி, ஜாதி சான்றிதழ், பிளட் குரூப், ஆதார் மற்றும் தொலைபேசி எண் அனைத்தும் அதில் இணைக்கப்படும்” என்று கூறினார்.
நேற்றைய அறிவிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில், அது குறித்து அமைச்சர் இன்று விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து இந்த 'டேட்டா' சேகரிப்புப் பணிகளைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”மாணவர்களுக்கு வழங்கப்படும் ஐ.டி. கார்டில் சாதி அடிப்படை இருக்காது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
விபத்து போன்ற அவசர காலங்களில் மாணவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகள் வழங்கவும், பெற்றோரைத் தொடர்பு கொள்ளவும் மட்டுமே முகவரி, பிளட் குரூப், ஆதார் அட்டை போன்ற விவரங்கள் க்யூ ஆர் கோடு (QR Code) மூலமாக இணைக்கப் பரிசீலிக்கப்படுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளாக வருவாய்த்துறை மூலம் பள்ளிகளிலேயே நேரடியாகச் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பணி தடையின்றி நடைபெற்று வருகிறது; அது தொடரும்” என்றார்.
தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நேற்றைய பேச்சில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் பின்வருமாறு கூறினார்:
"பள்ளியிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும் போது இந்த டேட்டாக்களும் சேகரிக்கப்படும் என்றுதான் கூறினேன். மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விவரங்களைப் போடும் வழக்கம் என்றைக்குமே இல்லை. மாணவர்கள் அனைவரும் ஒன்றுதான், எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதுதான் நம் கல்வித்துறையின் நோக்கம்."
இதன் மூலம், பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி அடையாளங்கள் எதுவும் இடம் பெறாது என்பது தெளிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sengottaiyan-school-student-id-card-caste-certificate-controversy-12111887





