வியாழன், 25 ஜூன், 2026

காலையிலே களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை:

 

Minister EV Velu

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2021-2026 தி.மு.க. ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. திருவண்ணாமலையை சேர்ந்த இவர், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க. சட்டமன்ற கொறடாவாக இருக்கிறார். திருவண்ணாமலை தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் இருக்கும் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேற்று பாண்டிச்சேரியில் எ.வ.வேலு இருந்த நிலையில், இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லம் உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தான் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை வெளியாகும்போது தான் எந்த வழக்கின் அடிப்படையில் அவரது இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது தெரியவரும். கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் சாலைப்பணிகள் மற்றும் கட்டிடம் கட்டுவது தொடர்பான பணிகளுக்கு அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சொத்துக்குவிப்பு தொடர்பான புகார்களில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-former-minister-ev-velu-home-raid-in-chennai-and-tiruvannamalai-update-in-tamil-12070176