இஸ்லாமிய மதத்திற்கு மாறிய நபர்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்' (BC Muslim) என்னும் சாதிச் சான்றிதழ் மற்றும் 3.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்த தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டு அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
முஹம்மது நபியின் போதனைகள் மற்றும் குர்ஆன் நெறிமுறைகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒருவருக்கு 'முஸ்லிம் லெப்பை' சமூகச் சான்றிதழ் வழங்க மறுத்த அதிகாரிகளின் உத்தரவை உறுதிசெய்து நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதன் படி, இஸ்லாம் மதத்திற்கு மாறும் நபர், தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்று கூறி இடஒதுக்கீடு கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இஸ்லாத்தில் சில பிரிவினரைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், மற்றவர்களை முன்னேறியவர்கள் என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாத்திற்கு மாறும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் அந்தஸ்தைக் கோர முடியாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம். அவர் ஒரு முஸ்லிம், அவ்வளவுதான் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவாக்கிய சமூகநீதி மண் தமிழ்நாடு. இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகளைப் பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர் நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யத் துணிந்துள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு மாறியவருக்கு 'பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்' எனும் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-to-appeal-madras-hc-verdict-on-caste-certificates-for-converted-muslims-law-minister-ctr-nirmal-kumar-announces-appeal-against-high-court-verdict-12112809





