26 6 2026
/indian-express-tamil/media/media_files/2026/06/26/sin-2026-06-26-10-19-33.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே மேற்கு ஆசியாவில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது போன்ற சூழல் உருவாகியுள்ளது. வியாழக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு சரக்குக் கப்பல் மீது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜலசந்தியில் என்ன நடந்தது?
ஈரானின் புரட்சிகர காவல்படை 'எவர் லவ்லி' என்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேறும்போது அதன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கப்பல் ஓமன் அருகே ஒரு ஏவுகணையால் தாக்கப்பட்டதாக பிரிட்டன் கடற்படை முகமையான 'UKMTO' தெரிவித்துள்ளது.
ஈரானின் எச்சரிக்கை
ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து கோரிக்கைகளை நிர்வகிக்கத் ஈரானால் அமைக்கப்பட்ட 'ஈரானின் பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம்' ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தங்களால் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளுக்கு வெளியே பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கப்பலின் உரிமையாளர், ஆபரேட்டர் மற்றும் கப்பல் தளபதிதான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
ஐ.நா சபையின் நடவடிக்கை
கடலில் தத்தளிக்கும் கப்பல்களுக்கான தன்னார்வ பாதுகாப்பு எஸ்கார்ட் திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஐ.நா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தொடங்கியிருந்தது. ஆனால், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பட்டியலில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்சீனியோ டொமிங்குவேஸ் கூறினார். மேலும், தாக்கப்பட்ட 'எவர் லவ்லி' கப்பல் தங்களது மீட்புப் திட்டப் பட்டியலில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பனாமா கொடி ஏந்திய இரண்டு கப்பல்களைத் தங்களது பாதையை மாற்றுமாறு ஈரானின் புரட்சிகர காவல்படை வியாழக்கிழமை உத்தரவிட்டதாகப் பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான 'ஆம்ப்ரே' தெரிவித்துள்ளது.
அனைத்து அதிகாரமும் எங்கள் கையில் தான் இருக்கு - டிரம்ப்
வியாழக்கிழமை மாலை வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் அமெரிக்க விவசாயிகளுடன் நடந்த இரவு விருந்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா தற்போது மிகவும் பலமான நிலையில் இருந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/international/shocking-news-drone-strike-on-ship-rocks-strait-of-hormuz-just-days-after-us-iran-peace-deal-12108048





