சனி, 27 ஜூன், 2026

முடிவுக்கு வரும் பரந்தூர் விமான நிலைய திட்டம்... ரெடியாகும் மாற்று இடம்?

 முடிவுக்கு வரும் பரந்தூர் விமான நிலைய திட்டம்... ரெடியாகும் மாற்று இடம்? 27 6 2026 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னைக்கான 2-வது பசுமைவெளி விமான நிலையத் திட்டம், அதிகாரப்பூர்வமாக கைவிடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு, பரந்தூரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதில்லை என்றும் விமான நிலையத்திற்கு ஏற்ற மாற்று இடத்தை ஆராய தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பரந்தூரில் விமான நிலையம் இல்லை

அதாவது, "சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது பரந்தூரில் அமையாது. இது குறித்த தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன, மாற்று இடங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன" என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏகனாபுரம் 7 ஆண்டு கால போராட்டம்

விமான நிலைய அறிவிப்பு வெளியான டிசம்பர் 16, 2019-ஆம் ஆண்டு முதல் பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். இந்தத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்ட 1,005 வீடுகளில், 605 வீடுகள் ஏகனாபுரத்தில்தான் இருந்தன. கிராமத்தின் 920 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை இருந்ததால், மொத்த கிராமமே வரைபடத்திலிருந்து அழியும் அபாயம் இருந்தது.

13 கிராமங்களின் 5,746 ஹெக்டேர் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளைக் கையகப்படுத்த கடந்த தி.மு.க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்கள் தொடர் உண்ணாவிரதம், மொட்டையடித்தல், பிச்சை எடுக்கும் போராட்டம் எனப் பல வழிகளில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

தமிழ்நாட்டில் மாறிய அரசு

கடந்த ஜனவரி 20, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், போராட்டக் களத்திற்கு நேரடியாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். "மக்களின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சி தேவைதான். நான் விமான நிலையமே வேண்டாம் என்று சொல்லவில்லை, விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துவிட்டு இந்த இடத்தில் அது வரக்கூடாது என்றுதான் சொல்கிறேன்" என விஜய் அப்போது பேசியிருந்தார். தற்போது அவர் முதல்வர் பொறுப்பேற்றுள்ள நிலையில், விவசாயிகளுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 1,700 ஏக்கர் நிலத்தின் நிலை என்ன?

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்காகச் சுமார் 1,700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு, 70% இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது இந்த நிலங்களை என்ன செய்வது என்ற புதிய சவால் அரசுக்கு எழுந்துள்ளது. இந்த இடத்தில் விவசாயத் தொழிலை மேம்படுத்தும் வேளாண் பதப்படுத்தும் மையங்கள், விவசாய சந்தை உள்கட்டமைப்பு, பட்டுப் பூங்கா  அல்லது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மாசுகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் விஜய் விரைவில் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி சரிவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட்

விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் பரந்தூர், காரை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலங்களை அதிக விலைக்கு வாங்கிய முதலீட்டாளர்களும், பில்டர்களும் தற்போது பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். முன்பு நிலத்தின் விலை பல மடங்கு எகிறிய நிலையில் தற்போது விமான நிலையம் வரப்போவதில்லை என்ற செய்தி பரவியதும் நிலத்தை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் வந்த விலைக்கு விற்று வருவதாக தெரிகிறது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/parandur-airport-plan-end-tn-govt-explores-new-site-for-chennais-second-airport-12110674