திங்கள், 22 ஜூன், 2026

ரயில்வே புதிய விதி

 

இந்திய ரயில்வேயின் 1989 ரயில்வே சட்டத்தின் கீழ், ரயில்களிலும் ரயில் நிலைய வளாகங்களிலும் புகைபிடிப்பதும், அனுமதியின்றி வியாபாரம் செய்வதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்நிலையில், மத்திய அரசின் புதிய ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-ன் கீழ், இக்குற்றங்களுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு, புதிய விதிகள் ஜூன் 20, 2026 முதல் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன

புகைபிடிப்பவர்களுக்கான புதிய விதிகள் 2026 (ரயில்வே சட்டம் பிரிவு 167):

ரயில்வே சட்டம் பிரிவு 167-ன் படி, ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் புகைபிடிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ரயில்களில் ஏற்பட்ட சில தீ விபத்துகளுக்குப் புகைபிடித்ததே முக்கியக் காரணமாக இருந்ததாகக் கருதப்படுவதால், இந்த விதிமுறை தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது.

முன்பு இதற்கு வெறும் ரூ.100 மட்டுமே அபராதமாக இருந்த நிலையில், புதிய ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-ன் படி, உடனடியாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களின் பயணச் சீட்டு (Ticket) அல்லது பாஸ் பறிமுதல் செய்யப்பட்டு, ரயிலில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர். இந்த அபராதத்தைச் செலுத்த மறுத்தால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் (குறைந்தபட்சம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்).

அனுமதியின்றி வியாபாரம் செய்தல் மற்றும் பிச்சை எடுத்தல் (ரயில்வே சட்டம் பிரிவு 144):

ரயில்களில் உரிமமில்லாத வியாபாரிகள் (Hawkers) பொருட்களை விற்பனை செய்வதும், பிச்சை எடுப்பதும் பயணிகளுக்குப் பெரும் தொந்தரவாக அமைகிறது. புதிய சட்டத்தின்படி, ரயில்வே நிர்வாகத்தின் முறையான உரிமம் இன்றி வியாபாரம் செய்பவர்களுக்கும், பிச்சை எடுப்பவர்களுக்கும் உடனடியாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அல்லது மறுத்தால், நீதிமன்றத்தின் மூலம் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். நீதிமன்றம் உரிய காரணங்களைக் குறிப்பிடாத பட்சத்தில், குறைந்தபட்சம் 1 மாத சிறை அல்லது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

தொடர் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை:

ஒரு நபர் இதே விதியை மீறி, நான்காவது முறையாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட முறையோ உரிமமின்றி வியாபாரம் செய்து பிடிபட்டால், அவருக்கு அதிகபட்சமாக 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் (குறைந்தபட்ச தண்டனை 3 மாத சிறை மற்றும் ரூ.2,000 அபராதம் ஆகும்). மேலும், இக்குற்றங்களில் ஈடுபடும் எவரையும் ரயிலில் இருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ உடனடியாக வெளியேற்ற ரயில்வே ஊழியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/indian-railways-new-penalty-rules-2026-smoking-hawking-begging-trains-fine-increased-12060641