மார்ச் 4-ம் தேதி தி.மு.க அரசு டெல்லிக்கு எழுதிய கடிதத்தை மறைத்தது ஏன்? 25 06 2026
எதிர்கட்சி தலைவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய் தீர்மானத்தில் திருத்தம் செய்து சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனாலும், மீண்டும் புதிய நடுவன் மன்றம் அமைத்தால், தமிழகத்திற்கு தான் பாதிப்பு வரும் என்று அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தை வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
இந்த பதிவில், இன்று வெளிவந்துள்ள ‘முரசொலி’ நாளிதழின் தலையங்கம், ‘புதிதாக ஒரு நடுவர் மன்றம்’ அமைப்பதை விமர்சிப்பது தமிழ்நாட்டின் ஒற்றுமை உணர்வைச் சிதைத்துவிடும் என்று கூறுகிறது. மேலும், தமிழ்நாடு ஒற்றுமையாக இல்லை என்று கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் நினைப்பதற்கு இது வழிவகை செய்யும் என்றும், இதனால் மாநில நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டு, நடுவர் மன்றத்தை விமர்சிக்கும் கட்சிகள் மீது மொத்தப் பழியையும் போடுகிறது.
ஆனால், இந்த நிலைக்கு யார் உண்மையான காரணம்? காவிரி போன்ற முக்கியத்துவமான பிரச்சினைகளில், வழக்கமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருமித்த கருத்தை உருவாக்குவதே அரசின் கடமையாகும். தி.மு.க ஆட்சியில் கூட கடந்த காலங்களில் அவ்வாறு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய கருத்தை தானடித்த மூப்பாக 4.3.2026 அன்று மத்திய அரசுக்கு திமுக ஆட்சியில் கடிதம் எழுதியதுதான் இத்தகைய நிலைமைக்கு முதல் காரணம். இதனை மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா?
மேகதாட்டு அணை தொடர்பாகத் தற்போது பிரச்சினை எழுந்தபோது, எங்களைப் போன்றவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அப்போதே அக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தால், இப்போது இப்படி ஒரு நிலை உருவாகி இருக்காது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற கதைக்கு ஏற்பவே இப்போதைய நிலைமை உள்ளது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.





