வியாழன், 25 ஜூன், 2026

தமிழகத்தின் முதல் ஏ.ஐ ஃபியூச்சர் டெக் கேம்பஸ்; இன்ஜினியரிங் மாணவர்களே நோட் பண்ணுங்க

 

தமிழகத்தின் முதல் ஏ.ஐ ஃபியூச்சர் டெக் கேம்பஸ்; இன்ஜினியரிங் மாணவர்களே நோட் பண்ணுங்க

24 06 2026
Artificial Intelligence Pixabay
தமிழகத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கல்லூரி வளாகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

இந்தக் கல்லூரி குறித்த தகவல்களை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார். அதன்படி, 

தமிழகத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கல்லூரி வளாகத்தை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தொடங்கியுள்ளது. பாரம்பரிய பொறியியல் கல்வியில் இருந்து மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த வளாகம் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள சென்னை பெருங்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகள் பொறியியல் கல்வியில் அனுபவமிக்க தனியார் நிறுவனமான ராஜலட்சுமி கல்லூரியின், இந்தக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க உள்ளது. அதேநேரம் மேனேஜ்மெண்ட் கோட்டா அடிப்படையிலும் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்தக் கல்லூரி ஐ.டி நிறுவனங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதோடு, எதிர்கால தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தர உள்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, சென்டர்ஸ் ஆஃப் எக்சலன்ஸ் போன்றவை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கல்லூரியில் 4 இன்ஜினியரிங் கோர்ஸ்கள் உள்ளன. 

1). கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்

2). இன்பர்மேஷன் டெக்னாலஜி

3). ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ்

4). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்

இவற்றில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன.

இந்தக் கல்லூரி தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு, முன்னணி ஐ.டி நிறுவனங்களில் சேர விரும்புவர்களுக்கு, உயர் கல்வி படிக்க விரும்புவர்களுக்கு, புதிதாக ஐ.டி நிறுவனத்தை தொடங்க விரும்புபவர்களுக்கு என மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. 

இந்த கல்லூரியில் 50% கல்வியாளர்களும் 50 ஐ.டி நிறுவன அதிகாரிகளும் ஆசிரியர்களாக பணியாற்ற உள்ளனர். மேலும் இங்கு 2 ஆண்டு வெளிநாட்டு கல்லூரி படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டர்ன்ஷிப் எனப்படும் நிறுவன பயிற்சியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கல்லூரியின் சென்டர்ஸ் ஆஃப் எக்சலன்ஸில் ஜெனரேடிவ் ஏ.ஐ, மெசின் லேர்னிங், டேட்டா அனாலிடிக்ஸ், கம்ப்யூட்டர் விஷன், இண்டலிஜென்ஸ் விஷன், ஏ.ஐ அப்ளிகேஷன்ஸ் போன்ற எதிர்கால தொழில்நுட்பங்கள் உள்ளன. இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2026-tamilnadu-engineering-admission-rec-ai-future-tech-campus-chennai-12069559