ஜெர்மனியில் இருக்கும் கொலாஞ்சே பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் திராவிட மொழிகள் துறை உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மிகப்பெரிய தமிழ்த்துறை இதுவாகும். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 தமிழ் புத்தகங்கள் இருக்கும் நூலகம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய தமிழ் நூலகம் இதுதான். இத்தகைய சிறப்புகள் அனைத்திற்கும் காரணம் பேராசிரியர் உல்ரைக் நிக்லஸ்!
1970-80 களில் தமிழ்நாட்டிற்கு வந்த நிக்லஸ் திராவிட இயக்கம், பெரியார் சித்தாந்தம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது பற்றுகொண்டார். தமிழ் கற்றுத் தேர்ந்த நிக்லஸ் சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்காசிய பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகள் தமிழ்ப்பேரசியராக பணியாற்றினார்.
பின்னர், கொலாஞ்சே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அங்கு இந்தியவியல் மற்றும் திராவிட மொழிகள் துறைக்கு தலைவரானார்.
தற்போதுவரை, அப்பொறுப்பில் இருக்கும் நிக்லஸ், “பெரியாரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. எனது துறையில் சேர விரும்பும் மாணவர்கள் திராவிட மொழிகளில் ஒன்றை நிச்சயம் படிக்க வேண்டும். குறிப்பாக, தமிழ் படித்தால் தான் எனது துறையில் இடம் கிடைக்கும்” என்கிறார்.
முத்தொள்ளாயிரம் நூலை மையமாக வைத்து முனைவர் பட்டம் பெற்றுள்ள நிக்லஸ், சிவாஜி கணேசனின் திரைப்படங்களைப் பார்த்து தமிழ்ப்பேச கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார்.