வெள்ளி, 1 டிசம்பர், 2017

3 மாவட்டங்களை புரட்டிப் போட்ட ஓகி புயல்..! December 1, 2017

Image

வங்கக் கடலில் உருவாகி, அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்த ஓகி புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலே முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், ஆயிரகணக்கான  மரங்கள், மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, செல்போன்களை பயன்படுத்த முடியாத சூழலில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே, தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓகி புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஓகி புயல், லட்சத் தீவை நோக்கி நகரும் என்றும், இது மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை தொடர்வதால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்