கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய ஓகி புயலின் தாக்கத்தல், நெல்லை மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக பணகுடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையின் வளாகம் மட்டுமின்றி, உள் பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கான படுக்கைகள் என அனைத்தும் நாசமாகின. ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் ஒன்றும் இடிந்து விழுந்தது. கனமழையின் போது வீசிய சூறைக் காற்றில் ஏராளமான மரங்களும் முறிந்து விழுந்த காரணத்தால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரோஸ்மியாபுரம், புண்ணியவளன்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக, வணிக வளாகங்களில், அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்த பொருட்களும் நீரில் மூழ்கி நாசமாகின. மழைநீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.