வெள்ளத்தால் சீர்குலைந்த கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், நிவாரணம், மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கேரளாவுக்கு இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
நிவாரண நிதி கேட்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிறப்பு பிரதிநிதிகளுடன் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்த பினராயி விஜயன், இந்தியாவில் இருந்து வரும் நிதியுதவிகளை கண்டு நெஞ்சம் நெகிழ்வதாக குறிப்பிட்டார். கேரள மாநிலம் குறித்து அபுதாபி அரசர் தினசரி தொடர்பு கொண்டு கேட்டறிவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.