புதன், 22 ஆகஸ்ட், 2018

12 நாட்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா! August 21, 2018

Image

வரலாறு காணாத மழை காரணமாக தத்தளித்து வந்த கேரள மாநிலத்தில் 12 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. 

கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை கொட்டித் தீர்த்த கனமழையால் அம்மாநிலத்தில் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், ராணுவத்தின் முப்படையும், தீயணைப்புத் துறை, கடலோர காவல் படை, தன்னார்வ குழுவினர், மீனவ அமைப்புகள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் 12 நாட்களுக்கு பிறகு கேரளாவில் நேற்று மழை சற்று ஓய்ந்தது. இதையடுத்து பலத்த மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது. இதன் காரணமாக கேரளாவில் நேற்று முதல் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கேரள மாநிலத்தில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. மேலும் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். 

சேதமடைந்த சாலைகளை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து வருகின்றனர். இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் முழுவதும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், INS கருடா கொச்சி விமானப் படை தளத்தை மையமாக கொண்டு இன்று முதல் தற்காலிகமாக பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா சார்பில் இயக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம், விமானப் படை தளத்தில் தரையிறங்கியது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித்தவிப்பவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர். எர்ணாகுளத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் மொட்டை மாடியில் தவித்துவந்த மூதாட்டி ஒருவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதேபோல் கேரள மாநிலம் திரிச்சூரில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 109 பேரை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். வெள்ள நீரில் சிக்கியவர்களை தங்கள் உயிரை பணயம் வைத்து கயிறு கட்டி மீட்ட கடற்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதற்கிடையே டெல்லியில் பேசிய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் டிஐஜி ரந்தீப் ரானா, கேரளாவில் கடந்த 2 நாட்களாக இயல்பு நிலை திரும்பி வருவதாக குறிப்பிட்டார். தற்போது மருத்துவ உதவிகளை வழங்குவதிலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.