செவ்வாய், 12 டிசம்பர், 2017

அமித் ஷா நினைத்தால் நாளையே ஆட்சி - எச்.ராஜா! அசைத்துக்கூட பார்க்க முடியாது - நாராயணசாமி! December 12, 2017

Image

ராகுல்காந்திக்கு காலனி எடுத்துக் கொடுக்கும் எடுபிடிதான் புதுவை முதல்வர் நாராயணசாமி என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி உருளையன் பேட்டையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து பேசியபோது ஹெச்.ராஜா இவ்வாறு கூறினார்.
இதேபோல், அமித்ஷா நினைத்தால், புதுச்சேரி, இன்றே பாஜக ஆளும் மாநிலமாக மாறும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ராகுலின் முன் பல்வேறு சவால்கள் காத்திருப்பதாகவும், அவற்றையெல்லாம் முறியடித்து ராகுல் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஒரு தலைவருக்குரிய அழகோடு பேசவில்லை என்று கூறிய நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை தடுப்பது பாஜக தான் என்பது எச்.ராஜாவின் பேச்சிலிருந்து உறுதியாகியுள்ளதாகக் கூறினார். பாஜகவால் புதுச்சேரி காங்கிரஸ் அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் நாராயண சாமி உறுதிபட தெரிவித்தார்.