வியாழன், 7 டிசம்பர், 2017

​தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்குமாறு இலங்கை எம்.பி பேச்சு! December 6, 2017

Image

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை எம்.பி. சரவணபவன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வடக்கு மாகாண எம்.பி. சரவணபவன், இந்திய மீனவர்கள் ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளங்களை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அள்ளிச் செல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், இந்தியா ஏற்றுமதி செய்யும் மீன்களின் 40 சதவீதம் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் தான் எனவும் சரவணபவன் புகார் கூறியுள்ளார். 

இதனால் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதற்கு பதிலளித்து பேசிய இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், வடக்கு பகுதி மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தான் இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து வைத்துள்ளது இலங்கை அரசு, இதனால்தான் இந்திய மீனவர்களின் வருகை 5% குறைந்துள்ளது, இலங்கை கடறப்படையில் அதி நவின ரோந்து கப்பல்கள் இருந்தும் ஏன் இந்திய மீனவர்களின் வருகையை தடுக்க முடியவில்லை? இந்திய அரசிடம் பகைமையாக இருக்க கூடாதா? இந்திய மீனவர்களால் பாதிக்கப்படுவது வடககு தமிழர்கள் தானே என பாரபட்சம் பார்க்கப்படுகின்றதா? தடைசெய்யப்பட்ட இழுவை மடி வலைகளை பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என கடந்த ஜீலை 27ம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது என்னானது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.  

எல்லை தாண்டும்  இந்திய மீனவர்களுக்கு தண்டனை அதிகரித்தால் தான் குற்றம் குறையும் என அவர் தெரிவித்ததர்.