கடலில் இருந்து வரும் உயர் அலைகளால் வடசென்னை பகுதிக்கு பேராபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
அண்மையில் வடசென்னை கடற்கரைப் பகுதியில் துறைமுகத்திற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்கு, நிலப்பகுதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையம் மதிப்பீடு செய்தது. இதில், கடலில் இருந்து வரும் பேரலைகளை தடுக்கும் நிலப்பகுதிகளை குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக தயார் செய்யப்பட்ட வரைபடம் தற்போது ரிமோட் சென்சிங் துறையால் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இதற்கு அனுமதி கிடைத்தால் கடலில் இருந்து வரும் பேரலைகளால் மிகப்பெரிய ஆபத்து நிலப்பகுதிகளுக்கு உருவாகும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றத்தால் கடலில் நீர் மட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கடற்கரை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் அமைந்துள்ள எண்ணூர் கடலோர பகுதிகளின் ஆயிரக்கணக்கான நிலப்பரப்புகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் எந்தவிதமான கட்டிடங்களும், ஆக்கிரமிப்புகளும் இருக்க கூடாது என்ற விதிகள் இருந்தாலும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்தாலும், துறைமுகத்தாலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. நிலப்பகுதிகளை பாதுகாத்து வரும் கொசஸ்தலை ஆறும், அதன் வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் இயற்கை ஆர்வலர் பூஜா.
எண்ணூரில் ஆறு, கடற்பகுதி, உப்பளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து வந்த நிலையில் தற்போது ஆற்றுக்கு வரும் வடிகால்களையும், கடலில் இருந்து பேரலைகளை தடுக்கும் உயரலை தடுப்பு பகுதிகளையும் சில நிறுவனங்கள் ஆக்கிமித்துள்ளதாக கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூஜா.
இவ்வாறு கடலில் இருந்து வரும் உயர் அலைகளை தடுக்கும் வகையில் இயற்கையாக அமைந்த பகுதிகளை ஆக்கிரமித்தால், மண் அரிப்பு, கடற்பரப்பு அரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் கடல் நீர் மட்டம் உயர்வு மற்றும் பேரலைகள் ஏற்படும் போது கடற்பரப்பில் இருக்கும் நிறுவனங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களால் பேராபத்துகள் உருவாகும் என எச்சரிக்கிறார் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் சுல்தான்.
துறைமுகத்திற்கான கிடங்கு மற்றும் கார் பார்க்கிங் உருவாக்க எண்ணுாரில் கடலுக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள உப்பளங்களையும், கால்வாய்களுக்கான வழித்தடங்களையும் குறைத்து காட்டும் வரைப்படத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்றும், இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பேராபத்துகள் தொடர்பாக வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குரல் கொடுக்க இருப்பதாகவும் கூறுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. கடல் நீர் மட்டம் உயர்வு, சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு, கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்பு போன்ற மனித தவறுகளால் அண்மைக்காலமாக சுனாமி, புயலின் தாக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் இயற்கை குறித்த புரிதல் மக்களுக்கு அவசியம் தேவை என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.