
லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏன் புதிய சட்டம் இயற்றகூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து ஓராண்டு கடந்த பிறகும் தாத்தாவின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவுசெய்யாமல் இருப்பதாகவும், பத்திரப்பதிவை முடித்து பத்திரங்களை வழங்க பம்மல் சார் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஆலந்தூரை சேர்ந்த பூபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற 77 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடு இந்தியா என்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதிக அளவில் அரசு அலுவலகங்களில் தான் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏன் புதிய சட்டம் இயற்றகூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
அதேபோல், புதிய சட்டம் இயற்றும் வரை லஞ்சம் பெற்ற அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கூடாது எனவும் வினவிய நீதிபதி, இது தொடர்பாக வரும் 11ம் தேதி பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.





