புதன், 6 டிசம்பர், 2017

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு! December 6, 2017

Image

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று என்பதால், தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோரையும், அவர்களின் உடமைகளையும் மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர். 

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இரயில் நிலையத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது. உள்ளுர் காவல் துறையினருடன் இணைந்து இரயில்வே பாதுகாப்பு காவல் படையினர் சோதனைகளை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். பயணிகளும் அவர்களது உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது. 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மர்ம நபர்களின் ஊடுறுவலைத் தடுக்கவும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, ஜூஜூவாடி, கக்கனூர், வேப்பனஹள்ளி உட்பட 9 க்கும் மேற்பட்ட மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.