
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தைவானின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கடற்கரை நகரமான ஹூவாலியனில், கட்டட இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 114 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பல அடுக்குமாடிகளைக் கொண்ட மிகப்பெரிய நட்சத்திர உணவு விடுதி ஒன்று சாய்ந்ததை அடுத்து, அதில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
நிலநடுக்கம் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதால் அவற்றில் வசிப்பவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறு அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தைவான் அதிபர் Tsai Ing-wen, இதற்கான களப்பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.