வெள்ளி, 4 மே, 2018

வடமாநிலங்களில் புழுதிப் புயலின் கோரத்தாண்டவத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலி! May 3, 2018

ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதச மாநிலங்களில் வீசி வரும் புழுதிப் புயலில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஒரு சில நகரங்களில் நேற்று மாலை திடீரென மழை மற்றும் புழுதிப் புயல் தாக்கியது.

உத்தரப்பிரதேசம்:

இதில் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் மின்னல், சூறாவளிக் காற்றுடன் மழை, புழுதிப் புயல் ஆகியவை ஒட்டுமொத்தமாக தாக்கியதன் காரணமாக வீடுகள், கடைகள் உள்ளிட்ட சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்ததுடன் இயற்கை கோரத்தாண்டவத்திற்கு இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயம்டைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிஜானூர், சாஹரன்பூர், பரேலி உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் புழுதிப் புயல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உத்தரப்ப்பிரதேசத்தில் மட்டுமே 64 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்:

உத்தரப்பிரதேசத்தின் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களான ஆல்வார், தோல்பூர் மற்றும் பரத்பூர் பகுதிகளிலும் புழுதிப் புயல் ஆக்ரோஷத்துடன் தாக்கியது. இங்கு இரவில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்களே பெரும்பாலும் பலியாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகங்கள் கூறியுள்ளன. தோல்பூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

புழுதிப் புயலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இது குறித்து மீட்பு, மருத்துவம் மற்றும் தேவைப்படும் உதவிகளை விரைந்து செய்து தருமாறு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts: