வெள்ளி, 4 மே, 2018

புழுதிப் புயல் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! May 4, 2018

Image

வட மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் புழுதிப் புயல் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம்,  டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 2ம் தேதி மாலை திடீரென புழுதிப் புயல் வீசியது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான இந்த புழுதிப் புயலில் ஏராளமான மண் மற்றும் குடிசை வீடுகள் தகர்ந்ததுடன், பல மரங்களும் வேருடன் பெயர்த்தெறியப்பட்டன. 

புதனன்று 109 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், 125 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்த புழுதிப் புயலுக்கு உத்தரபிரதேசத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கடுமையான கோடை வெய்யில் நாடு முழுவதும் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் வெவ்வேறு தட்பவெட்ப சூழலும், வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் நிலவும் வெவ்வேறு வெப்பநிலையும், வறண்ட தரைப்பிரதேச வெப்பக் காற்றுடன் சேர்ந்து இடிமின்னலுடன் கூடிய சூறைக்காற்றை, புழுதிப் புயலாக வீசுவதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

புதனன்று ஏற்பட்ட புழுதிப் புயலின் வேகமும், அது தாக்கத்திற்கு உள்ளாக்கிய பெரிய பரப்பும் துல்லியமாக கணிக்க முடியாததே பெரும் சேதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கடுமையான புழுதிப் புயல் வீசும் என்று எச்சரித்திருந்த  போதிலும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் பகுதிகளில் வீசும் என்று தெரிவிக்கப்படவில்லை. 

மே 2ம் தேதி மாலை 7 மணியளவில் திடீரென பலமாக வீசிய புழுதிப் புயலில் ராஜஸ்தானில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாரத்பூர் மாவட்டத்தில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். புழுதிப் புயலால் மோசமான பாதிப்பிற்குள்ளான, உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த 48 மணி நேரங்களுக்குள் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் பகுதிகளில் மீண்டும் ஒரு புழுதிப் புயல் தாக்குதல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புழுதிப் புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மட்டும் 13,000 மின்கம்பங்கள் சாய்ந்ததுடன், 100 டிரான்ஸ்பாரம்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே, உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புழுதிப் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.