
கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
கர்நாடக சட்டப் பேரவையின் பதவி காலம் வரும் 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் ஜெயநகர் தொகுதியிலும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடைய அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 222 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குசாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தாலும், 200 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.